பட்ஜெட் 2027-க்கு முன்னதாக பிரதமர் அன்வார் அறிவித்துள்ள சலுகைகள்
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது தேசிய தின உரையில், பட்ஜெட் 2027 தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே பல சலுகைகளை அறிவித்துள்ளார்.
அவற்றில் மிக முக்கியமாக, Budi95 எரிபொருள் ஒதுக்கீடு மாதம் 300 லிட்டராக மீண்டும் உயர்த்தப்படும் என்றும், BudiDiesel ஒதுக்கீடு மாதம் 400 லிட்டராக நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.
புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய பிரதமர்:
பட்ஜெட் 2027 விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் வரை காத்திருங்கள் என்றுதான் கூறுவேன். ஆனால் சிலர் பொறுமையுடன் காத்திருக்க விரும்பவில்லை. வாழ்க்கைச் செலவினங்களின் அழுத்தத்தை அக்டோபர் மாதம் வரை தள்ளிப்போட முடியாது என்று அமைச்சர்களும் கூறினர்.
“எனவே, பள்ளி மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டியதாயிற்று,” என்றார்.
தனது உரையில், அரசாங்கத்தின் பெரும்பாலான சலுகைகள் B40 பிரிவினருக்கே செல்வது போலத் தோன்றினாலும், M40 நடுத்தர வருமானப் பிரிவினரும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் குறைந்த வருமான வரி, ஆரம்பப் பள்ளி உதவித்தொகை மற்றும் மின்சார மானியங்கள் மூலம் அவர்களும் பயனடைவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
பள்ளிகளுக்கான கூடுதல் நிதி:
அடுத்த ஆண்டிற்கான பள்ளிகளின் பராமரிப்பு நிதி 50% உயர்த்தப்பட்டு, ரிம 1 பில்லியனிலிருந்து ரிம 1.5 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிதி தேசியப் பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், சமயப் பள்ளிகள், தஹ்ஃபிஸ் (Tahfiz), பொண்டோக் (Pondok) நிறுவனங்கள் மற்றும் சிறப்புப் பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
2027 ஜனவரியிலேயே பராமரிப்புப் பணிகளைத் தொடங்கும் வகையில், மாவட்ட வாரியாகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய கல்வி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்:
‘மக்களுக்கான AI’ (AI for the People) திட்டம் 18 முதல் 30 வயதுடைய மலேசியர்களுக்குத் திறந்துவிடப்படும்.
இதற்கான பயிற்சிகளை நிறைவு செய்யும் 100,000 இளைஞர்களுக்கு, மலேசியாவின் IlmuChat, அமெரிக்காவின் Gemini Enterprise, மற்றும் சீனாவின் Wonderclip, MuleRun ஆகிய AI செயலிகளை 3 மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தும் சந்தா வழங்கப்படும்.
டிஜிட்டல் சுகாதார மேம்பாடு:
பொது சுகாதாரத் துறையின் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்த MCMC நிறுவனம் ரிம 1 பில்லியன் வழங்கும்.
இதன் மூலம் 150 மருத்துவமனைகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட அரசு கிளினிக்குகளில் மின்னணு மருத்துவப் பதிவு முறை (Electronic Medical Records) மற்றும் இணையச் சேவை அமல்படுத்தப்படும்.
உயர் மின்னணு விலைப்பட்டியல் வரம்பு
கட்டாய e-Invoicing அமைப்பிலிருந்து விலக்கு பெறுவதற்கான வருடாந்திர விற்பனை வரம்பு ரிம 1 மில்லியனிலிருந்து ரிம 3 மில்லியனாக உயர்வு.
இதன் மூலம், ஆண்டு விற்பனை ரிம 3 மில்லியனுக்கு மிகாமல் இருக்கும் சிறு வணிகங்கள் e-Invoicing முறையை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
சிறு வணிகர்களுக்கான நிதி உதவி:
மைக்ரோ ஃபைனான்சிங் (Microfinancing) கடன் வசதிக்காக கூடுதல் ரிம 1 பில்லியன் ஒதுக்கப்பட்டு, 2026-ஆம் ஆண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரிம 6 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீதிகளில் வியாபாரம் செய்வோர், இரவுச் சந்தை வியாபாரிகள் மற்றும் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்யும் தாய்மார்களுக்கு உதவும் ‘ஜெரான் செஜாதேரா மடானி’ (Geran Sejahtera Madani) திட்டத்திற்கு கூடுதல் ரிம 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
























