‘அன்வார் இஸ்லாமியச் சட்டங்களை ஆதரிக்கிறார்; ஒரினச் சேர்க்கையை அல்ல’

பிகேஆர் தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. அவர் உண்மையில் அந்த விவகாரம் மீதான இஸ்லாத்துக்குப் புறம்பான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே கேட்டுக் கொண்டார் என்பதை அது சுட்டிக் காட்டியது.

“ஷாரியா கோட்பாடுகளுக்கு ஏற்ப இல்லாத, மக்களை ஒடுக்குகின்ற பழைய சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே அன்வார் கருதுகிறார்,” என பிகேஆர் சமயப் பிரிவுத் தலைவர் அகமட் காசிம் கூறினார்.

அன்வார் பிபிசி ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, அவர் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக காட்டியது குறித்து அகமட் விளக்கமளித்தார்.

“திருநங்கைகளின் உரிமைகளைப் பொறுத்த வரையில் பாகுபாடு காட்டாத யோசனையை ஏற்றுக் கொள்ளத் தயாரா என அன்வாரிடம் பிபிசி வினவியது.

அதற்கு அன்வார் அளித்த பதில் “நாம் பழைய சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்,” என்பதாகும்.

“மலேசியாவில் உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான திருமணம் என்ற புனிதத்தன்மையை நம்புகிறோம். அதனை ஆதரிக்கிறோம். ஆனால் நாம் தண்டிப்பவர்களாகவும் கருதப்படக் கூடாது. பழைய சட்டங்கள் இன்னும் பொருத்தமானவை என்றும் எண்ணக் கூடாது.”

அந்த அறிக்கையின் அடிப்படையில் அகமட் சொன்னார்: ” இரு பாலின உறவுகளுக்கு அன்வார் தமது கடப்பாட்டைத் தெரிவித்துள்ளார். ஒரினச் சேர்க்கையை அது சட்டப்பூர்வமாக்காது என்ற பக்காத்தான் ராக்யாட் நிலையை அது வலுப்படுத்துகிறது.”

“நாம் அன்வாருடைய பதிலை ஆய்வு செய்தால் இந்த நாட்டில் ஒரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க அவர் எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்,” என அந்த கோலக் கெடா எம்பி-யுமான அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் அன்வார் அறிக்கையை சொந்தமாகப் படிக்க வேண்டும் என்றும் ‘அம்னோ கட்டுக்குள் உள்ள ஊடகங்கள் நடத்தும் பிரச்சாரத்தை நம்பக் கூடாது’ என்றும் அகமட் வலியுறுத்தினார்.

“இஸ்லாமியப் போராட்டம் என்னும் பெயரில் அந்த விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம் என நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரைக் களங்கப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை,” என்றும் அவர் சொன்னார்.

அன்வார் பிபிசி-க்கு அளித்த பேட்டியை உள்ளூர் நாளேடுகளான உத்துசான் மலேசியாவும் பெரித்தா ஹரியானும் செய்தியாக வெளியிட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சமயத் தலைவர்கள் அன்வாரை குறை கூறினர்.