நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான், பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணையாது என்று அமானா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் காலித் சமது தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு, பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் ஆகிய கூட்டணிகளைத் தவிர, மற்ற எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயல்பட பக்காத்தான் ஹரப்பான் தயாராக இருப்பதாக காலித் கூறினார்.
பாரிசான் உடன் இணைந்து செயல்படுவதற்கான கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒருவேளை பாரிசான், பெரிக்காத்தான் உடன் இணைந்து செயல்பட விரும்பினால், அது அவர்களின் உரிமை, அது அவர்களின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹரப்பானைப் பொறுத்தவரை, நாங்கள் எங்களின் கொள்கைகளின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடுவோம்.
மலாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் மலாக்கா பெர்சத்து மற்றும் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நாளுக்குப் பிறகே அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
பெர்சத்து கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் துன் பைசல் இஸ்மாயில் அஜிஸ், தேர்தல் பிரிவு இயக்குநர் அலி முகமது, துணைப் பிரிவு தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் மற்றும் மலாக்கா தகவல் தொடர்பு பிரிவு தலைவர் ஹிஷாமுதீன் கரீம் ஆகியோர் இதில் கலந்துகொண்டவர்களில் அடங்குவர்.
மலாக்கா அமானா தலைவர் அஷ்ரப் முக்லிஸ் மிங்ஹாட் மற்றும் மலாக்கா பிகேஆர் செயல் தலைவர் ஆடம் அட்லி ஆகியோரும் உடனிருந்தனர்.
இருப்பினும், பக்காத்தான் ஹரப்பான் தகவல் தொடர்பு இயக்குநர் பாமி பட்சில், இந்த சந்திப்பு குறித்த செய்திகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறினார்.
மலாக்கா தேர்தலுக்கான கூட்டணி குறித்து பெர்சத்து கட்சியுடன் பக்காத்தான் ஹரப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை என்று கூறிய பாமி, அரசியல் ஒத்துழைப்பு குறித்த இறுதி முடிவை பக்காத்தான் அதிபர் கவுன்சிலே எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
-fmt























