பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடத்தைப் பார்வையிடும் பொருட்டு சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையக் குழு இன்றுகேஎல் சென்ட்ரலுக்கு வருகை அளித்தது.
சுதந்திரமான நியாயமான தேர்தல்களை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நிகழ்ந்த பேரணியின் போது முக்கியமான இடங்களில் ஒன்றாக கேஎல் சென்ட்ரல் திகழ்ந்தது.
அந்த இடத்தில்தான், பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் பல எதிர்த்தரப்புத் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
ஜாலான் துன் சம்பந்தன் வழியாக இஸ்தானா நெகாராவுக்குச் செல்லும் முன்னர் நூற்றுக்கணக்கான பெர்சே 2.0 ஆதரவாளர்கள் ஒன்று கூடிய சுரங்கப் பாதையையும் சுஹாக்காம் துணைத் தலைவர் காவ் லேக் தீ தலைமையிலான குழு நேரடியாகப் பார்வையிட விரும்பியது.
அந்த சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறுவதற்கான இரு வாயில்களிலிருந்து எல்எஸ்எப் (LSF) படை சுட்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் அதில் சிக்கிக் கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்தக் குழுவுடன் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் வான் அப்துல் பேரி வான் அப்துல் காலித்-தும் சென்றிருந்தார். போலீசார் மீது கூட்டத்தினர் “தாக்குதல் நடத்த தயாராக” இருப்பது தெளிவானதும் தெரிந்ததும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக அவர் ஏற்கனவே தமது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
போலீஸ்காரர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருந்த கூட்டத்தினரைக் கலைப்பதற்கு அந்த நடவடிக்கை அவசியமாக இருந்ததாகவும் வான் அப்துல் பேரி சொன்னார்.
சுஹாக்காம் குழுவினர் அந்த சுரங்கப் பாதையை பார்வையிட்ட போது விளக்கு வெளிச்சம் அவ்வளவாக இல்லை. பயணிகளுக்காக காத்திருந்த வாகனங்களும் பஸ்களும் வெளியாக்கிய புகை சூழ்ந்திருந்தது.
பின்னர் அந்தக் குழுவினர் சுரங்கப்பாதை மூலம் எஸ்கலேட்டர் என்ற தானியங்கி படிக்கட்டு வழியாக
கேஎல் சென்ட்ரலின் தரைத் தளத்துக்குச் சென்றனர். குறுகலான அந்த படிக்கட்டில் இருவர் மட்டுமே நிற்க முடியும்.
அங்கு சென்றதும் அந்த நிலையத்தைச் சுற்றிலும் தமது அதிகாரத்தின் கீழ் இயங்கிய ஐந்து எல்எஸ்எப் படைகள் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த இடங்களையும் வான் அப்துல் பேரி சுட்டிக் காட்டினார்.
ஹோட்டல்களுக்கு முன்புறம் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த டாக்ஸி நிறுத்துமிடங்களையும் சுஹாக்காம் குழுவினர் பார்வையிட்டனர்.
கேஎல் சென்ட்ரலுக்குள்ளும் சுரங்கப் பாதைக்குள்ளும் நுழைவதற்கு முன்பு ஒரு நாள் பெர்சே, பக்காத்தான் தலைவர்கள் அந்த ஹோட்டல்களில்தான் தங்கியிருந்தனர்.
அந்த வருகையை முடித்துக் கொண்டதும் அன்றைய தினம் என்ன நடந்திருக்க வேண்டும் என்பது மீது விசாரணைக் குழுவுக்கு நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக காவ் கூறினார்.
ஆனால் போலீஸ் அதிகாரியின் சாட்சியத்தில் அவர் மன நிறைவு அடைந்தாரா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
“ஒரு முடிவுக்கு வரும் முன்னர் நாங்கள் எல்லா சாட்சியங்களையும் பரிசீலினை செய்வோம். இப்போது அல்ல,” என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே கேஎல் சென்ட்ரல் நிகழ்வுகள் குறித்து பெர்சே 2.0 தலைவர் அம்பிகா நாளை காலை விசாரணை மீண்டும் தொடங்கும் போது சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.