பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என துவான் இப்ராகிம் கருத்து

பெர்சத்து கட்சியின் தலைவர் முஹிதின் யாசின், தனது கட்சிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அக்கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூட்டணியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சி எந்த விதிகளையும் மீறாத பட்சத்தில், அதற்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஹிதின் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், பெரிக்காத்தான் கூட்டணியில் பாஸ் கட்சி செய்ததாகக் கூறப்படும் விதிமீறல்கள் குறித்து சங்கங்களின் பதிவாளரிடம் தனது கட்சிதான் புகார் அளித்தது என்றும் அவர் கூறியிருந்தார்.

பாஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கும் துவான் இப்ராகிம், முஹிதின் எழுப்பிய கேள்விக்கு அவரே பதிலளித்துவிட்டார் என்று கூறினார்.

முஹிதினின் கேள்விக்கான பதில் ஏற்கனவே அவரது கருத்துகளிலேயே உள்ளது. பெரிக்காத்தான் கூட்டணியைக் கலைக்க முயலவோ அல்லது கூட்டணியைப் பலவீனப்படுத்தும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவோ பெர்சத்து கட்சிக்குத் தேவையில்லை.

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறுவது தான் நல்லது. சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்ததே அவர்கள் தான், ஆனால் இப்போது RoS அமைப்பு பெரிக்காத்தான் கூட்டணியின் பதிவை ரத்து செய்தபோது அவர்களே வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று  ஊடகத்திடம் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்திற்கு எதிராக இந்தக் கூட்டணி தாக்கல் செய்துள்ள நீதித்துறை மறுஆய்வு மனு மீதான முழுமையான விசாரணை முடியும் வரை, பெரிக்காத்தான் கூட்டணியின் பதிவை ரத்து செய்யும் சங்கங்களின் பதிவாளரின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பெரிக்காத்தான் கூட்டணியின் பதிவை ரத்து செய்ய RoS எடுத்த நடவடிக்கை, அந்த கூட்டணியின் தரப்பில் தவறு நடந்துள்ளதற்கான சான்றாகும் என்றும், அதே வேளையில் இம்விவகாரத்தை பதிவாளரிடம் புகாரளித்ததன் மூலம் பெர்சத்து கட்சி விதிகளைப் பின்பற்றியுள்ளது என்றும் முஹிதின் கூறியிருந்தார்.

பெர்சத்து கட்சிக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குறித்து ஆலோசித்து, எடுக்கப்பட வேண்டிய தகுந்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக, அது பெரிக்காத்தான் கூட்டணியின் உச்சக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக துவான் இப்ராகிம் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்டது உள்ளிட்ட அரசியல் சாசனத்தை மீறியதற்காக, பெர்சத்து கட்சிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரிக்காத்தான் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இறுதி செய்வதற்கு முன், கூட்டணியின் நலன்களுக்கு எதிராகச் சென்றதாகக் கூறப்படும் பெர்சத்து கட்சியின் பல நடவடிக்கைகள் குறித்து பெரிக்காத்தான் கூட்டணி உன்னிப்பாகப் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.

 

 

 

-fmt