என்எப்சிக்கு அரசாங்கம் வழங்கிய ரிம250 மில்லியன் எளிதான வட்டி கடனுக்கு ஒப்புதல் அளித்ததில் அக்கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த முகைதின் யாசினுக்கு ஏதேனும் பங்குண்டா என்பதை விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று டிஎபி கோரியுள்ளது.
இன்று என்எப்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை பதில்களைவிட அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளது என்று ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் கூறினார்.
“‘கால்நடை கொண்டோ’ ஊழல் சம்பந்தமாக ஏன் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு என்எப்சி மார்ச் 8 அரசியல் சுனாமிக்கு முன்பு விவசாய அமைச்சராக இருந்த முகைதின் யாசின் அந்த ரிம250 மில்லியன் கடனுக்கு ஒப்புதல் அளித்ததில் அவருடைய பங்கு மற்றும் பொறுப்பைக் குறிப்பிடும் இரண்டு மிக வலுவான காரணங்களைக் கொடுத்துள்ளது”, என்றார் லிம்.
அக்கடனுக்கான ஒப்பந்தம் 2007 ஆண்டில் கையெழுத்திடப்பட்டது என்றும் பொதுக் கணக்காய்வுக் குழு (பிஎசி) கூறுவது போல் 2009 ஆண்டில் இல்லை என்றும் என்எப்சி கூறிக்கொள்கிறது.
மேலும், அக்கடன் உடன்படிக்கை டிசம்பர் 6, 2007 இல், 2010 ஆண்டில் அல்ல, கையெழுத்திடப்பட்டு முதல் தடவையாக ரிம7 மில்லியன் ஜனவரி 2008 இல் “முறையான நடமுறைக்கு ஏற்ப” பெறப்பட்டது என்று என்எப்சி கூறுகிறது.
“அச்சமூட்டும் கதைகள்”
என்எப்சியின் அந்த அறிக்கைப்படி “கால்நடை கொண்டோ” சம்பந்தப்பட்ட அனைத்துத் தீர்க்கமான நிகழ்வுகளும் நடந்தது அதற்குப் பொறுப்பான அமைச்சராக முகைதின் யாசின் இருந்த போதுதானே தவிர வேறு எவரும் இல்லை என்றார் லிம்.
அரச விசாரணை ஆணையம், அது அமைக்கப்பட்டால், இப்போது துணைப் பிரதமராக இருக்கும் முகைதினை தவிர, என்எப்சியில் காணப்படும் “குளறுபடிக்கு” முழு மற்றும் இறுதிப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பதற்கு விடை காண வேண்டும் என்று லிம் கூறினார்.
இன்று வெளியிடப்பட்ட என்எப்சியின் அறிக்கை, பொதுக் கணக்காய்வுக் குழு (பிஎசி) வழக்கத்திற்கு முற்றிலும் மாறான முறையில் விசாரணையைத் தொடராமல் இருந்து வருகிறது என்பதை மலேசியர்களுக்கு நினைவுறுத்துகிறது என்று லிம் கிட் சியாங் மேலும் கூறினார்.
“ஏன் பொதுக் கணக்காய்வுக் குழு இந்த விவகாரத்தில் பிரச்னையை நேரடியாக எதிர்க்கொள்ளாமல் மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மலேசியர்களுக்கு உண்டு.
“மார்ச் 12 க்குள் என்எப்சி ஊழல் பற்றிய அதன் அறிக்கையை பிஎசி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமா?”, என்று அவர் வினவினார்.