சிஜாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் ஆட்சி மன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் (விரிவாக)

சிஜாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் அகமட் யூனுஸ் ஹைரி இன்று சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி-க்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இஸ்தானா புக்கிட் காயாங்கானில் இன்று காலை மணி 10.10க்கு சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் அகமட் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்வில் அனைத்து ஆட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மருத்துவரான அகமட், மலாய் பழக்க வழக்கங்கள், இளைஞர், விளையாட்டுத் துறை, ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றுவார்.

ஹசான் பொறுப்பேற்றிருந்த இஸ்லாமிய விவகாரங்கள், அடிப்படை வசதிகள், பொது வசதிகள் ஆகிய துறைகளுக்கு இனிமேல் மந்திரி புசார் காலித் இப்ராஹிமே பொறுப்பு வகிப்பார்.

47 வயதான அகமட் 1991ம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

“நான் இந்த நியமனத்தை எதிர்பார்க்கவில்லை. நான் இப்போது தான் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அதனால் என்னுடைய துறைகள் குறித்து நான் இப்போது எந்தக் கருத்தும் சொல்ல முடியாது,” என்றார் அகமட்.

சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் ரானி ஒஸ்மான் ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்படலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இளைஞர், விளையாட்டுத் துறைகளுக்கான துணை ஆட்சிமன்ற உறுப்பினராக அகமட் ஆற்றியுள்ள திறமையான பணிகளைக் கருத்தில் கொண்டு அவர் தேர்வு செய்யப்பட்டதாக காலித் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“ரானி உட்பட பாஸ் கட்சியின் ஆசீர்வாதம் அந்த நியமனத்துக்குக் கிடைத்துள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

ஆட்சி மன்றத்தில் மாற்றங்கள்

ஹசானுடைய கடமைகளில் ஒரு பகுதியை ரானி ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் வறிய, கிராமப்புறப் பகுதிகளுக்கான சிறிய கடனுதவிப் பிரிவுக்கு  தலைவராக இருப்பார்.

பாங்கி சட்ட மன்ற உறுப்பினரான ஷாபியி அபு பாக்கார் மலாய் பழக்க வழக்கங்கள் மீதான கழகத்துக்கு (Padat) பொறுப்பேற்பார்.

இஸ்லாமிய விவகாரங்களை காலித் ஏன் ஏற்றுக் கொண்டார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த மந்திரி புசார், சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்தில்  குழு உறுப்பினர்களாக இருக்கும்

மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் ஆகியோருக்கு சமமாக இருக்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இஸ்லாத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளும் விவேகமான அமலாக்கமும் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.