அடுத்த தேர்தலில் நீங்கள் எங்கு போட்டியிடப் போகிறீர்கள். சொல்லுங்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுறச் செய்வோம். இப்படி மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை நோக்கி ஒரு சவாலை விடுத்துள்ளார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
அப்படி அவர் அறிவித்தால் “லியோ தெங் லாய் செய்ததுபோல்” தாங்களும் அந்த இடத்துக்குச் சென்று நம்பிக்கையுடன் சவால் விட ஆயத்தமாக இருப்பதாக அவர் கிண்டலடித்தார்.
“சுவா எங்கு போட்டியிடப்போகிறார் என்பதை அறிவிப்பாரா? அப்படிச் செய்தால் அங்கு சென்று லியோ சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்ல நாங்களும் தயாராக இருக்கிறோம்.”
பினாங்கில் முதலமைச்சரின் நாடாளுமன்றத் தொகுதியை வெல்லும் ஆற்றல் மசீசவுக்கு உண்டு என்று லியோ அண்மையில் குறிப்பிட்டதன் தொடர்பில் லிம் இவ்வாறு கூறினார்.
சுகாதார அமைச்சரான லியோ, மசீச லிம்மை எதிர்த்துப் போட்டியிட பொருத்தமான ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்திருப்பதாகக் கூறினார்.
லிம்முக்கு நிறைய வேலைகள் இருப்பதால் அவரால் அத்தொகுதியில் கவனம் செலுத்த முடிவதில்லை என்றும் அத்தொகுதியைக் கவனித்துக்கொள்ள கடினமாக உழைப்பதற்கு தயங்காத பொறுப்பான ஒருவர் தேவை என்றும் லியோ கூறியிருந்தார்.
டிஏபிக்கு மசீசவைப்போல் “வீராப்புமொழிகள்” பேசிக்கொண்டிருக்க நேரமில்லை என்று லிம் குறிப்பிட்டார்.
சுவா, பக்காத்தான் ரக்யாட் பற்றியும் டிஏபி பற்றியும் பொய்களைப் பரப்பி வருவதாகவும் லிம் குறைகூறினார்.பினாங்கில் நிதி நிர்வாகம் சரியில்லை அதனால் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அவர் கூறியதாக லிம் குற்றம் சாட்டினார்.
“ஏமாற்று அரசியல் மசீசவுக்கே உரியதாகும். கருப்பை வெள்ளை என்பார்கள். வெள்ளையைக் கருப்பு என்பார்கள்”, என்றாரவர்.
பினாங்கு பற்றாக்குறை பட்ஜெட்டை எதிர்நோக்கியது இல்லை. பக்காத்தான் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்தில் கடந்த நான்காண்டுகளாக உபரி பட்ஜெட்தான். தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையே இதற்குச் சான்று என்றாரவர்.
ஊழலை எதிர்க்கும் முயற்சியாக பொது டெண்டர் முறையை அறிமுகப்படுத்தியதற்காக ட்ரேன்பேரன்ஸி இண்டெர்நேசனல் அமைப்பின் பாராட்டைப் பெற்ற ஒரே மலேசிய மாநிலம் பினாங்குதான் என்றும் லிம் கூறினார்.