ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அம்னோவை புத்ராஜெயாவிலிருந்து அகற்றும் ஒரே நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள “அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை” என்ற ‘Asalkan Bukan Umno’ (Anything But Umno) ABU-உடன் இணைந்து கொண்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு இயக்கங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த ABU அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஹாரிஸ் இப்ராஹிமுடன் கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் டபிள்யூ சம்புலிங்கம் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
மக்கள் நன்மைக்காக ABU அமைப்புடன் இணைந்து செயல்பட அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“வேதமூர்த்தி லண்டனில் ABU தலைவர்களுடன் பல முறை பேச்சுக்களை நடத்தியுள்ளார். இறுதியில் அவர்களுடன் சேருவதற்கு ஒப்புக் கொண்டார்,” என்றார் சம்புலிங்கம்.
“கூட்டு இயக்கத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு, ஜோகூர், பேராக் ஆகியவற்றில் மொத்தம் 11 செராமா நிகழ்வுகளை அவை முதலில் நடத்தும்.”
தொடக்கமா கவரும் சனிக்கிழமை ஷா அலாமில் நிகழும் கூட்டத்தில் சம்புலிங்கம், ஹாரிஸ், செகுபார்ட் என்று அழைக்கப்படும் Solidariti Anak Muda Malaysia (SAMM) அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் ஆகியோர் பேசுவார்கள்.
அம்னோவை அதிகாரத்திலிருந்து நீக்கவும் மக்களைக் காப்பாற்றவும் அரசாங்க எதிர்ப்பு அமைப்புக்கள் ஒன்றுபடுவது முக்கியம் எனவும் சம்புலிங்கம் வலியுறுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப், வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின், எதிர்க்கட்சிகள் உட்பட எல்லாத் தரப்புக்களும் அரசியல் சுனாமிக்கு உதவியதை அவர் எடுத்துக் காட்டினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பிஎன் -னும் வீழ்ச்சி காண்பதை உறுதி செய்ய ABU அமைப்பு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என ஹாரிஸ் தெரிவித்தார்.
என்றாலும் தேர்தலில் எந்த வேட்பாளரையும் நிறுத்துவதற்கு அது எண்ணவில்லை என்றும் அவர் சொன்னார்.