மலாய் ஒற்றுமை சீர்குலைவுக்கு அரசாங்கமே காரணம் என்று நேற்று பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருந்தார். அதனை வரவேற்ற பிகேஆர், மலாய் சமூகத்தில் பிளவு ஏற்பட்டதற்கு பக்காத்தான் ராக்யாட் காரணம் என ஆளும் கூட்டணி சுமத்தி வந்த பழியிலிருந்து அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியை அகற்றி விட்டதாக கூறியது.
“முன்னைய பிரதமரும் முன்னைய அம்னோ தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் காலத்தின் அம்னோ தலைவர்கள் தொடங்கிய கறை படிந்த அரசியல் ஆட்டத்தின் விளைவே- இன்று காணப்படுகின்ற மலாய்-முஸ்லிம் ஒற்றுமைச் சீர்குலைவுக்குக் காரணம் என்பது இப்போது தெளிவாகி விட்டது.”
இவ்வாறு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமட் நூர் மானுட்டி விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.
அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதாலும் நம்பிக்கையை மீறி விட்டதாலும் ஊழலாக இருப்பதாலும் மலாய்க்காரர்கள் பிளவுபட்டுள்ளதாக ஹாருஸ்ஸானி கடந்த புதன் கிழமை ஷா அலாமில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.
அன்வார் இப்ராஹிமை மகாதீர் நீக்கியதே மலாய் ஒற்றுமைச் சீர்குலைவுக்குக் காரணமே தவிர அன்வார் அல்ல என்பதும் முப்தியின் கருத்துக்கள் காட்டியுள்ளதாகவும் முகமட் நூர் சொன்னார்.
“அத்துடன் அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு பொய்யானது அவதூறானது என்றும் மலாய் முஸ்லிம் சமூகத்தின் ஒரு தலைவரை வீழ்த்தும் நோக்கம் கொண்டது என்றும் நாங்கள் கூறுவதையும் பேராக் முப்தியின் அறிக்கை வலுப்படுத்துகிறது.
“அன்வாரை நீக்கியது தார்மீக நோக்கமல்ல. மாறாக மகாதீரும் அவருடைய வட்டமும் தீட்டிய தீய சதி என்பதும் தெளிவாகியுள்ளது,” என்றார் அவர்.
அன்வாரை நீக்க வேண்டாம் எனத் தாம் அப்போதைய பிரதமர் மகாதீருக்கு ஆலோசனை கூறியதாகவும் ஆனால் அது அலட்சியம் செய்யப்பட்டதாகவும் ஹாருஸ்ஸானி ஷா அலாம் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
“அன்வார் சாதாரண செல்வாக்கைக் கொண்டவர் அல்ல. அவரி நீக்கினால் மலாய் சமூகம் பிளவுபடும் என்றும் நான்கு சாட்சிகள் இல்லாமல் அன்வார் மீது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை சுமத்துவது மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்றும் நான் மகாதீரிடம் கூறினேன்.