எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொள்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன. ஆனால் அந்த அலுவலகம் அதனைச் செய்வதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாதது குறித்து அஸ்லான் முகமட் லாஸிம் கவலை தெரிவித்துள்ளார்.
முறையீடு செய்து கொள்வதற்கான நோட்டீஸை சட்டத்துறைத் தலைவர் விரைவில் வழங்குவார் எனத் தாம் நம்புவதாக அஸ்லான், தமது புதல்வரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய வலைப்பதிவில் சேர்த்துள்ள பத்திரிக்கைக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
“அரசாங்க வழக்குரைஞர் என்னும் முறையில் சட்டத்துறைத் தலைவர் ஜனவரி 9ம் தேதி உயர் நீதிமன்ற முடிவுக்கு எதிராக முறையீடு செய்து கொள்வார் என நான் நம்புகிறேன். முறையீட்டை சமர்பிப்பதற்கான விஷயத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாதது, தந்தை என்ற முறையில் எனக்குக் கவலை அளிக்கிறது.”
“முறையீடு செய்வதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. முறையீட்டுக்கான நோட்டீஸைச் சமர்பிப்பது மீது மாண்பு மிகு சட்டத்துறைத் தலைவர் முழுக் கவனம் செலுத்துவார் என நான் நம்புகிறேன்.”
மேல் நீதிமன்றங்களான முறையீட்டு நீதிமன்றத்திலும் கூட்டரசு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படும் பொருட்டு முறையீட்டுக்கான வாய்ப்பை தமக்கும் தமது புதல்வருக்கும் சட்டத்துறைத் தலைவர் வழங்க வேண்டும் என்றும் அஸ்லான் கேட்டுக் கொண்டார்.
“வழக்குரைஞர் மன்றம் அல்லது முறையீடு செய்து கொள்ளக் கூட்டது என எண்ணும் எந்த ஒரு தரப்பின் நெருக்குதலுக்கும் சட்டத்துறைத் தலைவர் பணியக் கூடாது என்றும் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
அடுத்த புதன் கிழமைக்குள் முறையீடு செய்ய வேண்டும்
இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருப்பதாக அஸ்லான் குறிப்பிட்டுள்ள போதிலும் அரசாங்கத் தரப்பு ஜனவரி 25ம் தேதி அதாவது அடுத்த புதன் கிழமைக்குள் முறையீட்டை சமர்பிக்க முடியும்.
வரும் திங்கட்கிழமையும் செவ்வாய்க் கிழமையும் சீனப் புத்தாண்டு விடுமுறைகளாக இருப்பதும் தீர்ப்பைத் தொடர்ந்து அரசு தரப்பு முறையீட்டை தாக்கல் செய்ய 14 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளதுமே அதற்குக் காரணங்களாகும்.
குதப்புணர்ச்சி வழக்கு II என அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த வழக்கில் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்படுமா இல்லையா என்பதற்கு நேற்று வரை எந்த அறிகுறியும் இல்லை.
முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கிய சொலிஸிட்டர் ஜெனரல் II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் கூறியுள்ளார்.
இது அஸ்லானுடைய இரண்டாவது வேண்டுகோளாகும். தமது புதல்வர், குடும்ப கௌரவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அரசு தரப்பு முறையீடு செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு இரண்டு நாட்கள் பின்னர்-ஜனவரி 11ம் தேதி- அஸ்லான் வேண்டுகோள் விடுத்தார்.
முறையீடு செய்யப்படுமா இல்லையா என்று கடந்த சனிக்கிழமை நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பதை சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் தவிர்த்தார்.