இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், கரைப் பகுதியில் இருந்து நழுவி கடலுக்குள் சென்று கொண்டிருப்பதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், கப்பல் முழுவதும் மூழ்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் செல்ல வேண்டிய பாதையில் இருந்து திசை திரும்பியதால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு கோஸ்டா கான்கார்டியா கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஷெட்டினோ (வயது 52) தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு நேற்று, ரோம் மாஸ்ஜிதிரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், பாறை அருகில் கவிழ்ந்துள்ள அக்கப்பல், தொடர்ந்து நழுவி, கடல் பக்கமாக செல்வதாக, இத்தாலி கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியில் இருந்த நீர் மூழ்கும் மற்றும் மலையேறும் வீரர்கள், உடனடியாக பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
விரைவில், கப்பல் மேலும் நகர்ந்து, கடலுக்குள் சென்று மூழ்கிவிடும் எனத் தெரிவதால், மீட்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளிடையே கவலை ஏற்பட்டுள்ளது. 11 பேர் பலியாகியுள்ள இச்சம்பவத்தில், காணாமல் போன, 23 பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இதற்கிடையில், கப்பலின் 17 டேங்குகளில் உள்ள எரிபொருளை, பத்திரமாக அங்கிருந்து அகற்றும் பணியில், நெதர்லாந்தின் “ஸ்மிட்’ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனினும், கப்பலின் நகர்வால் அப்பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்கப்பல், கடந்தாண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, இதே வழியாக எவ்வித விபத்தும் இன்றி சென்றதற்கான செயற்கைக் கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அப்போதைய பயணப் பாதை, கப்பலை இயக்கும் கோஸ்டா க்ரூயிசஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விஷயமும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.