சிரியாவின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்; ஒபாமா வலியுறுத்தல்

சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் குடியரசுத் தலைவர் அசாத்தை எதிர்த்து, கடந்தாண்டு மார்ச் முதல், அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அரபு லீகின் பிரதிநிதிகள், சிரியாவில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அரபு லீக் குழு வந்த பின்பும் கூட, மக்கள் மீதான சிரிய இராணுவத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், லெபனான் எல்லை அருகில் உள்ள ஜபாதானி என்ற இடத்தில், எதிர் தரப்பு வீரர்களுக்கும், சிரிய இராணுவத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தரப்பினரும் அந்நகரின் தெருக்களில் இருந்து விலக சம்மதித்துள்ளனர்.

இதற்கிடையில், சிரியாவில் அரபு லீக் குழுவின் பணிகளை, சீனா வரவேற்றுள்ளது. சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லியு வெய்மின் நேற்று அளித்த பேட்டியில், “அரபு லீக் குழு வந்த பின்பும் கூட வன்முறை குறையவில்லை என்றாலும் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. அதன் பணி வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

அரபு லீகின் படைகள், சிரியாவில் குவிக்கப்பட்டு மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற கத்தாரின் கோரிக்கையை, நேற்று முன்தினம் சிரியா நிராகரித்தது. இந்நிலையில், சிரியா மீதான புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பையோ, படைக் குவிப்பையோ அனுமதிக்க முடியாது என ரஷ்யா உறுதியாகத் தெரிவித்துள்ளது.

சிரிய பிரச்னைக்குத் தீர்வாக ரஷ்யா கொண்டு வந்துள்ள தீர்மானம் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் அத்தீர்மானத்தை எதிர்க்கின்றன. அந்நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தால், அதை ரஷ்யா எதிர்க்கிறது. பாதுகாப்புக் மன்றம், சிரியா தொடர்பாக ஓர் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிப்பதற்கு ரஷ்யாவும், சீனாவும் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமா அளித்த பேட்டியில், “துரதிர்ஷ்டவசமாக அந்நாட்டில் நிகழும் வன்முறைகளை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாங்கள் பேசினாலும், சிரிய விவகாரத்தைத் தான் முக்கியமாக விவாதித்தோம். சிரியா வன்முறையை கைவிடுவதற்கான அனைத்துலக நெருக்கடி மற்றும் சூழலை உருவாக்குவது குறித்து ஆலோசித்தோம்” என்றார்.