டிஏபி-யிடம் “வெறும் பேச்சுத்தான்” என்று ஜாடைபேசும் மசீச வீடியோ

சீனப்புத்தாண்டு அருகிலும் பொதுத் தேர்தல் நெருங்கியும் வந்து கொண்டிருக்கும் வேளையில், மசீச ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் நோக்கில்  யு-டியுப்பில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளது.அக்காணொளி புத்தாண்டு வாழ்த்தும் சொல்கிறது, மசீசவின் பரம-வைரியான டிஏபியை ஜாடையாக தூற்றவும் செய்கிறது.

மூன்று நாள்களுக்குமுன் மசீச தலைமையகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட அக்காணொளி, டிஏபிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாது; பேசத்தான் தெரியும் என்று மறைமுகமாக குத்திக்காட்டுகிறது. 

அக்காணொளி, ஒரு சீனக் குடும்பம் திங்கள்கிழமை புத்தாண்டைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது.

அதில் இரண்டு சகோதரர்கள் வருகிறார்கள்.இளையவர் சிவப்பு, வெள்ளை நிறச் சட்டையில். மூத்தவர் நீல நிற கழுத்துப்பட்டை கொண்ட வெள்ளைச் சட்டையில்.

நீல நிற கழுத்துப்பட்டை கொண்ட வெள்ளைச் சட்டை மசீச கட்சியின் சீருடை. வெள்ளையும் சிவப்பும் டிஏபி கட்சியின் நிறங்களாகும்.

அண்ணன் வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்.தம்பியோ, அண்ணனை அதைச் செய் இதைச் செய் என்று விரட்டுகிறாரே தவிர வேலை ஒன்றும் செய்யக்காணோம்.

தம்பியின் செயலால் பொறுமையிழக்கும் அண்ணன், “வெறும் பேச்சுத்தான். எதுவுமே செய்வதில்லை. கடைசியில் நான்தான் உன் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியுள்ளது”, என்று முணுமுணுக்கிறார்.

அப்போது அவர்களின் அம்மாபோல் தோற்றமளிக்குக் ஒரு பெண்மணி வருகிறார்.ஒரு வாளி நீரையும் ஒரு துணியையும் இளையவரிடம் நீட்டுக்கிறார்-அவரும் உதவ வேண்டும் என்று கூறுவதுபோல.

தாயார் அந்தப் பக்கமாக திரும்பியதும், அண்ணனைத் தனியே வேலை செய்ய விட்டுவிட்டு தம்பி புறப்பட்டுச் சென்று விடுகிறார்.

“நீ வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, என்னையாவது வேலை செய்ய விடு”, என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே அண்ணன் சுவரில் கண்ணாடி போடப்பட்டு தொங்கும் பாராட்டு மடல்களைத் துடைக்கத் தொடங்கி விடுகிறார்.

அவற்றில் ‘மசீச கல்விக்குப் பணிசெய்கிறது’, ‘1மசீச கல்வி உதவித் திட்டம்’ முதலிய மசீச  சுலோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

காணொளியின் கடைசிப் பகுதியில் புத்தாண்டு விருந்தில் குடும்பமே ஒன்றுகூடுகிறது. மசீச வாழ்த்தும் மேலெழுந்து வருகிறது. 

இக்காணொளி தொடர்பில் கருத்துரைக்குமாறு மசீச விளம்பரப் பிரிவு துணைத் தலைவர் லோ செங் கொக்கைக் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையே டிஏபி-யின் தேசிய விளம்பரப் பிரிவு உதவி செயலாளர் தியோ நை சிங், அக்காணொளி சுமத்தும் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார்.

மசீசவினர்தாம் நிறைய பேசுவார்கள், ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதைத்தான் அக்காணொளி சித்திரிக்கிறது என்றாரவர்.

சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்,  சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென், கல்வி துணை அமைச்சர் வீ கா சியோங் போன்றோர் தோற்றுப்போன மசீச தலைவர்களுக்கு எடுத்துக்காட்டு என்று அந்த செர்டாங் எம்பி குறிப்பிட்டார்.

“இதையெல்லாம் விழாக்காலத்தில் மசீச பொதுமக்களுக்கு நினைவுறுத்துவதும் நல்லதுதான்.மசீசவில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்குப் பேச மட்டும்தான் தெரியும்.”