“மலாய் இடச்சாரிகள் உண்மையான சுதந்தரப் போராளிகள் அல்ல”

வரலாற்றில்  துல்லிதம் இல்லாத பல விஷயங்கள் அடங்கியிருப்பதாக வரலாற்றுப் பேராசியரான கூ கே கிம் கூறுகிறார்.

அவற்றில் ஒன்று மலாய் இடச்சாரி அமைப்புக்களில் உண்மையில் சுதந்திரப் போராளிகள் இருந்தனரா என்ற கேள்வியாகும். அது குறித்து கூ சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பாக பிகேஎம்எம் என்ற Parti Kebangsaan Melayu Merdeka பற்றிக் குறிப்பிட்டார். அந்த அமைப்புக்குத் தலைமை தாங்கிய அகமட் போஸ்தமாம் இந்தோனிசியாவிலிருந்து வந்தவர் என்றார் அவர்.

மலாய் இனத்தின் மூலம் அல்லது பிறப்பிடம் என்பது மீது நடைபெறும் மாநாடு ஒன்றில் கூ நேற்று பேசினார்.

“அந்த இடச்சாரி அமைப்புக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருந்தாலும் அந்நிய ஆட்சியிலிருந்து மலாயாவை விடுவிக்கப் போராடினாலும் அவற்றின் எண்ணம் உள்நாட்டு சுயாட்சியாக இருக்கவில்லை.”

“நீங்கள் பிகேஎம்எம்-ஐ எடுத்துக் கொண்டால் அதன் உண்மையான பெயர் Partai Kebangsaan Melayu Merdeka என்பதாகும். அந்த Partai என்னும் சொல் அதன் மூலம் இந்தோனிசியாவில் இருப்பதைக் காட்டுகிறது.”

சிவில் சமூகத்தை பிரதிநிதிப்பதற்கு இடச்சாரிகள் பயன்படுத்திய “marhaen” என்னும் சொல் கூட பாட்டாளி  வர்க்கத்தை குறிக்கும் மார்க்ஸிஸ்ட் சொல் என்பதையும் கூ சுட்டிக் காட்டினார்.

இந்தோனிசிய இடச்சாரிகள் வருவதற்கு முன்னர் தீவகற்பத்தில் அந்த சொல் கிடையாது. இந்தோனிசியாவில் இடச்சாரி தேசியவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்தச் சொல் உருவாக்கப்பட்டது.

“மெர்தேக்கா என்பது அகண்ட இந்தோனிசியா என அர்த்தம்”

இந்த நாட்டில் அகமட் போஸ்தமாம் பிரபலப்படுத்த விரும்பிய, முயன்ற சொல் அதுவாகும்,” என கூ சொன்னார்.

“சுயாட்சிக்கு உள்ளூர் மக்களை  வலுப்படுத்துவதைக் காட்டிலும் மலாயாவுக்கு சுதந்தரத்தை கொண்டு வந்து ‘அகண்ட இந்தோனிசியாவுடன்’ இணைப்பதே  பிகேஎம்எம்-மின் இலட்சியமாக இருந்தது.”

“அதனை உள்ளூர் மலாய்க்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் மிலாயு என்பது தானா மிலாயு (Tanah Melayu) ஆகும். 

கம்யூனிஸ்ட்களைப் பொறுத்த வரையில் அவர்களைச் சுதந்தரப் போராளிகள் என்று கூறுகின்றவர்களை அந்த வரலாற்றுப் பேராசிரியர் சாடினார்.

அவர் “Kepala otak! (அவர்கள் என்ன நினைக்கின்றனர்) என கூ கூறினார்.

“பிகேஎம்எம்-ஐப் போன்று அவர்களும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து சண்டையிட்டாலும் அவர்களுடைய நோக்கம் இடச்சாரிகளைக் காட்டிலும் விரிவாக இருந்தது.”

“அவர்கள் கம்யூனிஸ்ட் உலக ஒழுங்கு முறையின் கீழ் உலக கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைத் தோற்றுவிக்க விரும்பினர். எல்லா நாடுகளும் கம்யூனிஸ்ட் கட்சியால் நிர்வாகம் செய்யப்பட வேண்டும்.”

அப்போதைய கம்யூனிஸ்ட் இயக்கம் ஐரோப்பாவில் பின்பற்றப்பட்ட மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டது எனக் கூறிய கூ, அது உழைப்பாளர் வர்க்கம், பாட்டாளி வர்க்கம் அல்லது அகமட் போஸ்தாமாம் கூறியது போல “marhaen”-னுக்கு முதலிடம் கொடுத்தது.

அத்தகைய அரசாங்கம் அன்றைய கிராமப்புற மலாயாவில் பெரும்பான்மையாக இருந்த சொந்த நிலத்தைக் கொண்டிருந்த விவசாயிகள் வர்க்கத்தை ஒதுக்கியிருக்கும்.

“கம்யூனிஸ்ட்கள் மலாயா சுதந்தரத்துக்குப் போராடியதாக அவர்கள் சொல்கின்றனர். அது தவறு. அவர்களுக்கு கம்யூனிசம் என்றால் என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. சாதாரண மக்களுக்கு அது தெரியாது.”

ஜப்பானியப் படைகள் மீட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் திரும்புவதற்கு இரண்டு வாரம் பிடித்தது. அந்த கால இடைவெளியில் மலாயாவில் பெரும் குழப்பம் நிலவியது. அப்போது கம்யூனிஸ்ட்கள் தங்களது உண்மையான நிறத்தைக் காட்டினர். வெறிப் பிடித்து அலைந்தனர். மக்களைக் கொன்றனர். கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாட்டை உருவாக்க முயன்றனர் என கூ தெரிவித்தார்.

அத்தகைய கம்யூனிஸ்ட் ஆட்சி உள்ளூர் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்காது. அதற்கு மாறாக உலக கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு அடி பணிந்த ஒரு நாட்டை தோற்றுவித்திருக்கும். இந்த நிலத்தின் பண்பாடும், சமயங்களும் பழக்க வழக்கங்களும் நசித்துப் போயிருக்கும்.

பொருத்தமான அறிவாற்றலுக்கு மதிப்புக் கொடுங்கள்

பொருத்தமான அறிவாற்றல் இல்லாவிட்டால் பிரிட்டிஷாருக்கு எதிரான கம்யூனிஸ்ட் போராட்டத்தில் உள்ள உண்மையைப் போன்று எது உண்மை எது பொய் என்பதை மக்கள் பகுத்தறிய முடியும் என கூ வினவினார்.

“எப்போது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என நான் அவர்களைக் கேட்டால், உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் அனைவருக்கும் அது தெரியாது.”

அந்த நிலைக்கு கல்வி முறையே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். கற்பனையான கதைகளுக்கு பதில் உண்மையான வரலாற்றைப் பொது மக்களுக்குத் தெரிவிக்க அது தவறி விட்டது என்றார் கூ.

“இறுதியில் கல்வித் திட்டம் சரியான தேர்ச்சி பெற்ற வரலாற்று ஆசிரியர்களினால் தயாரிக்கப்படவில்லை. நமது நடப்பு முறையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ளவர்களே மிகவும் வலிமை வாய்ந்தவர்களாகத் திகழ்கின்றனர்.’

“பல்கலைக்கழகத்தில் உள்ள எங்களுடைய சம்பளங்களைக் கூட நிர்வாகம் நிர்ணயம் செய்கிறது. எங்களுக்கு அதிகாரம் இல்லை. வலிமை இல்லை. அவர்கள்தான் பொறுப்பு வகிக்கிறார்கள்.”

“நாங்கள் பொது மக்களிடம் மட்டுமே எங்கள் நிலையை தெரிவிக்க முடியும். ஏதாவது செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை.”

“எது வரலாறு என்பதை நிர்வாகம் முடிவு செய்கிறதா” என அவரிடம் வெளிப்படையாகவே கேட்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அத்தகைய தில்லுமுல்லுகளினாலும் உண்மையான வரலாறு ஒதுக்கப்பட்டதாலும் மலேசியா தனது சொந்த வரலாற்று உண்மைகளை அலட்சியம் செய்து விட்டது. அந்த உண்மைகள் லண்டனிலும் பாங்காக்கிலும் போர்ச்சுக்கலிலும் சிங்கப்பூரிலும் உள்ள பழஞ்சுவடிக் காப்பகங்களில் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றை நமது சொந்த உயர் கல்விக் கூடங்கள் மறந்து விட்டன அல்லது புறக்கணித்து விட்டன.

அக்கறையற்ற அந்தப் போக்கிற்கு வரலாறு பொருட்படுத்த வேண்டிய விஷயம் அல்ல, ஆகவே அது முக்கியமல்ல என்ற எண்ணத்தினால் ஏற்பட்ட விளைவாகும் என கூ கருதுகிறார்.