அம்னோ-எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது;ஒருவருக்குக் காயம்

Anything But Umno(அபு) என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘செராமா’ ஒன்று “போக்கிரி” கூட்டமொன்றின் அடாவடித்தனத்தால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.

பிஎன், அம்னோ அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட டி-சட்டை அணிந்து இளைஞர்கள் கலாட்டா செய்ததால் ‘செராமா’  தடைப்பட்டது என சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) நிர்வாக இயக்குனர் இ.நளினி தெரிவித்தார்.

“இரவு மணி 9-க்கு செராமா தொடங்குவதாக இருந்தது.நாங்கள் மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஆறு, ஏழு மனிதர்கள் ஓர் இளைஞனைக் கம்புகளால் அடித்துக் கொண்டிருந்தார்கள்”, என்றார் நளினி.

நளினி கூறியதை அபு ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ் இப்ராகிமும் உறுதிப்படுத்தினார். ஓர் இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“மேலும் 20 பேர், கைகளில் இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் மண்டபத்துக்கு வெளியில் அமளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்”, என்று நளினி மலேசியாகினியிடம் தெரிவித்தார். அது “அம்னோ கோட்டை” என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் நளினி கூறினார்.

ஜாலான் கெபுனில் உள்ள ஷா ஆலம் மாநகராண்மைக் கழக மண்டபத்தில் இண்ட்ராபும் சேர்ந்து கூட்டாக ஏற்பாடு செய்திருந்த அந்த செராமா, பாதுகாப்புக் காரணத்தை முன்னிட்டு இரத்து செய்யப்பட்டது.

ஹரிஸுடன் பிகேஆரின் பட்ருல் ஹிஷாம் ஷாரின், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் டபுல்யு.சம்புலிங்கம் ஆகியோரும் அதில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஏற்பாட்டாளர்கள் இன்று பின்னேரம் முடிவு செய்வார்கள் என்று ஹரிஸ் குறிப்பிட்டார்.

போலீஸ் ரோந்து கார்கள் வந்ததும் போக்கிரிகளின் கூட்டம் கலைந்து சென்றதாக நளினி தெரிவித்தார்.

இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன் விடுத்த அறிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஹார்ன்களில் உரத்து ஒலி எழுப்பி பெரும் குழப்பத்தை உண்டுபண்ணியதாகக் கூறினார். செராமாவில் கலந்துகொள்ள வந்திருந்த மலாய்க்காரர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறும் அவர்கள் கூறினார்கள்.

“சிலரை மண்டபத்தைவிட்டு வெளியேற வைத்த அவர்கள் அதன்பின்னர் மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள், மேசைகள் போன்றவற்றை மோதிக் கீழே தள்ளினார்கள்.

“அந்த மாட் ரெம்பிட்டுகளில்  ஒருவர் மண்டபத்துக்குள்ளேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். இதனால் அங்கு அமர்ந்திருந்த கூட்டத்தினர் பதறியடித்து விலகி ஓடினர்”, என்று கணேசன் கூறினார்.

ஒருவர் எதிர்த்துக் கேட்கப்போய் அது சண்டையில் முடிந்தது. மோட்டார் சைக்கிள் கும்பல் அவரைக் “கண்மூடித்தனமாக தாக்கியது. நினைவிழந்து கிடந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.”

பிஎன்னும் அம்னோவும் இளைஞர்களைப் பயன்படுத்தி செராமைக் குலைக்க முயன்றதாக கணேசன் குற்றம் சாட்டினார். 

கூட்டத்தைக் கெடுப்பதற்கு என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் இண்ட்ராபும் அபுவும் தொடர்ந்து கருத்தரங்குகளையும் செராமாக்களையும் ஏற்பாடு செய்துவரும் என்றாரவர்.

இதனிடையே, அங்கு நடந்த அமளியில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுவதை சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் தும் ஹம்சா மறுத்தார்.

“ஒன்றுமே நடக்கவில்லை. அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆத்திரமடைதிருக்கிறார்கள். அவ்வளவுதான். அம்னோ அல்லது பின் ஆதரவாளர்கள் யாரும் அவர்களுக்குத் தொல்லை தரவில்லை”, என்று துன் ஹிசானைத் தொடர்புகொண்டபோது கூறினார்.

“போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை. காயம் அடைந்ததாகக் கூறப்படுகின்றவர்கூட புகார் செய்யவில்லை”, என்றாரவர்.