டெங்கி நோயாளிகள் பற்றி அறிவிக்காமல் இருப்பது குற்றமாகும்

மருத்துவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் சிகிச்சை பெற்ற டெங்கி நோயாளிகள் பற்றி அறிவிக்கத் தவறுவது தொற்று நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

அந்தச் சட்டத்தின் கீழ் 24 மணி நேரத்துக்குள் மருத்துவர்கள் டெங்கி நோயாளிகள் பற்றித் தகவல் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கூறுகிறார்.

“அமைச்சு அந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறது. அந்த நோயாளிகள் குறித்த தகவல்களை அவர்கள் தரத் தவறினால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குப் பாதகம் ஏற்படும். அதனால் அந்த நோய் பரவவும் கூடும்,” என்று அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

பெட்டாலிங் ஜெயாவில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஆறு மருத்துவ அதிகாரிகளுக்கு தங்களது இடங்களில் டெங்கி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது பற்றிய தகவலைக் கொடுக்கத் தவறியதற்காக கடந்த ஆண்டு தலா ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் லியாவ் சொன்னார்.

“அந்த மருத்துவமனை 213 டெங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. அதில் ஆறு நோயாளிகள் பற்றி எந்த சுகாதார அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை,” எனக் கூறிய அவர், எல்லா டெங்கி நோயாளிகள் பற்றியும் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சு அரசாங்க, தனியார் மருத்துவமனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் சொன்னார்.

இவ்வாண்டு முதல் வாரத்தில் இருவர் டெங்கிக் காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாண்டு இதுவரையில் 921 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்னாமா