RM 600,000 தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதை எதிர்க்குமாறு NFC-க்கு பெர்க்காசா அறைகூவல்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை நடத்துகின்றவர்கள், 600,000 ரிங்கிட் நிறுவன நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் பொருட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்து போலீஸில் புகார் செய்யுமாறு மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா இன்று என்எப்சி-க்கு சவால் விடுத்தது.

மறுப்பறிக்கைகளை வெளியிட்டு வரும் என்எப்சி நிர்வாக இயக்குநர் வான் ஸாஹினுர் இஸ்மிர் சாலே அந்த புகாரை செய்ய வேண்டும் என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கேட்டுக் கொண்டார்.

“போலீசில் புகார் செய்யுமாறு நான் இஸ்மிருக்கு சவால் விடுக்கிறேன். பிகேஆர் தொடர்புடைய புக்கு ஜிங்கா 13 அமைப்பு என்எப்சி-க்கு எதிராக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் அறிவிக்க வேண்டும்,” என இப்ராஹிம் சொன்னார்.

கிரடிட் கார்டு செலவுகள் மீது பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த இஸ்மிர், அந்த நிறுவனக் கிரடிட் கார்டு செலவுகள் வர்த்தக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டவை எனச் சொன்னார்.

“குற்றம் சாட்டப்பட்டது போல சொந்தச் செலவுகள் ஏதுமில்லை. அந்த நிறுவனம் பல மில்லியன் ரிங்கிட் பெறும் விற்பனையைப் பெற்றுள்ளதால் நான்கு இயக்குநர்களின் வர்த்தக மேம்பாட்டுச் செலவுகளை அது பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்ட இஸ்மிர் அந்த புள்ளி விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மொத்தம் 593,500 ரிங்கிட்டை செலவு செய்ததாக ராபிஸி கூறிக் கொண்டுள்ளார். அதற்கான பணம் என்எப்சி நிதிகளிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

என்எப்சி ஊழலை அம்பலப்படுத்தி வரும் அந்த பிகேஆர் தலைவர், தலா 122,402 ரிங்கிட்டுக்கும் 182,525 ரிங்கிட்டுக்கும் இடையிலான செலவுகளுக்கு நிறுவனத்தின் பெயரில் உள்ள கிரடிட் கார்டுகளை நிர்வாகப் பதவிகளை வகிக்கும் நால்வர் பயன்படுத்தியதாகவும் ராபிஸி கூறிக் கொண்டார்.