50-50 அல்ல, இடங்களை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு இன்னும் பிஎன் -னுக்கு உள்ளது

எதிர்க்கட்சிகள் வசம் இப்போது இருக்கும் மாநிலங்களை பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் கைப்பற்றுவதற்கு 50க்கு 50 வாய்ப்புக்களே உள்ளன என்று கூறப்படுவதை அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிடி நிராகரித்துள்ளார்.

குத்து மதிப்பாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஆய்வின் விளைவே அத்தகைய எண்ணம் என அவர் சொன்னார்.

“பிஎன்-னாக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் வெற்றி பெறவே விரும்புகின்றன. பிஎன் -னைப் பொறுத்த வரையில் மக்களுடைய உள்ளத்தைக் கவர நாங்கள் எங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவோம். வளர்ச்சித் திட்டங்களை அமலாக்குவதோடு மட்டுமின்றி உதவிகளையும் வழங்குவதின் வழியும் அதனைச் செய்வோம்,” என ஸாஹிட் தெரிவித்தார்.

பாகான் டத்தோவில் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகையை 500 பேருக்கு வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அவர் பாகான் டத்தோ தொகுதிக்கான எம்பி-யும் தற்காப்பு அமைச்சரும் ஆவார். மக்களுடைய அரசியல் நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களை கவருவதற்கும் அவர்களுடைய பிரச்னைகளை அறிந்து கொள்வதற்கும் புதிய அணுகுமுறையை பிஎன் உருவாக்கியுள்ளதாகவும் ஸாஹிட் சொன்னார்.

களத்தில் மக்களைச் சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முயற்சிகளை பிஎன் தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் புள்ளி விவரங்களின் படி பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூரையும் கெடாவையும் பிஎன் பேராக்கையும் நெகிரி செம்பிலானையும் இழக்கும் சாத்தியம் 50க்கு 50 ஆக இருப்பதாக பெட்டாலிங் ஜெயா சன்வே-யில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறைக்குத் தலைவராக பணியாற்றும் ஜேம்ஸ் சின் கூறியிருந்தார்.

பினாங்கு கிளந்தானும் எதிர்க்கட்சிகளுக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றுகின்றன. சபா, சரவாக் தொடர்ந்து ஆளும் கூட்டணிக்கு வைப்புத் தொகையாக இருந்து வரும் என்றும் சின் குறிப்பிட்டிருந்தார்.

சரவாக்கில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளையும் சபாவில் ஆறு முதல் எட்டுத் தொகுதிகளையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

என்றாலும் அந்த தேர்தல் புள்ளிவிவரங்கள் முழுமையானதாக இல்லை என்பதால் 13வது பொதுத் தேர்தலின் முடிவுகளை கணிப்பது சிரமம் என்றும் சின் கூறினார்.

பெர்னாமா