பழனிவேல் இப்போது இந்திய விவகாரங்களுக்கான வழிகாட்டும் அமைச்சர்

இந்நாட்டின் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டும் அமைச்சராக பிரதமர் இலாகா அமைச்சரான ஜி.பழனிவேல் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார்.

கோலாலம்பூர் எஸ்ஜேகே கின்றாரா தமிழ்ப்பள்ளியில் இன்று நடைபெற்ற மலேசிய தமிழ்ப்பள்ளிகள் சமூகத்தின் ஆண்டு கூட்ட நிகழ்ச்சியில் மஇகா தலைவருமான ஜி.பழனிவேலின் நியமனம் அறிவிக்கப்பட்டது.

சமூகத்தை முன்னேற்றம் காணச் செய்வதற்கு அதன் நோக்கத்தை “நம்பிக்கை” என்ற தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று நஜிப் கூறினார்.

“நாம் ‘நம்பிக்கை’ என்ற கோட்பாடு மற்றும் தத்துவத்தால் வழிநடத்தப்பட்டால் மற்றும் நமக்குள் ‘நம்பிக்கை’ இருந்தால், நம்மால் அடைய முடியாததும் தீர்க்க முடியாத பிரச்னை எதுவும் இல்லை.

“பாரிசான் நேசனல் தலைமைத்துவத்தின் அடிப்படையாக விளங்கும் இந்த ‘நம்பிக்கை’ நாம் பெருமைப்படக்கூடிய விளைவுகளைக் கொணரும் என்று நான் நம்புகிறேன்”, என்று அவர் கூறினார்.

அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால வளர்ச்சியிலும் அதன் மூலம் இந்நாட்டில் இந்தியர்களின் எதிர்காலத்திலும் அக்கறை கொண்டுள்ளது; 2009 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரையில் நாடுதழுவிய அளவில் தமிழ்ப்பள்ளிகளின் பொருள்கள் மற்றும் கட்டமைப்பு மேற்பாட்டிற்காக அரசாங்கம் ரிம340 மில்லியனை ஒதுக்கியிருந்தது.

மேலும், 2009 ஆண்டிலிருந்து தமிழ்ப்பள்ளிகளை நடத்துவதற்கும் நிர்வாகிப்பதற்கும் அரசாங்கம் சுமார் ரிம2 பில்லியனை முதலீடு செய்துள்ளது என்றாரவர்.

“2012 ஆண்டிற்கான பட்ஜெட்டில், தமிழ்ப்பள்ளிகளின் தரத்தையும் பொருள்களையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதற்காக ரிம100 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை நான் அறிவித்தேன்.

“செலவுகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அத்தொகை சம்பந்தப்பட்ட பள்ளிகள் உண்மையிலேயே பயனடைவதற்கு செலவு செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.

சிபிஎப் 4,000 மாணவர்களுக்கு உதவியது

நிதி உதவி வழங்கும் விவகாரத்தில் “சமூகப் பெட்டகம்” (community chest) போன்ற இதர அமைப்புகளுடனும் அரசாங்கம் ஒத்துழைத்துள்ளது. இப்பொதுநல நிதியிலிருந்து கடந்த ஆண்டு மட்டும் ரிம5 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களும் அரசு சார்பற்ற அமைப்புகளும் நாட்டில் கல்வி மேம்பாட்டிற்கு, தமிழ்ப்பள்ளிகள் உட்பட, உதவும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

“இந்த அரசு சார்பற்ற அமைப்பின் மூலம், நாடுதழுவிய அளவில் கல்வி கற்பதில் பலவீனமாக இருந்த 4,000 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் உதவியுள்ளோம். சிபியின் தலையீட்டால் இன்று அவர்கள் அப்பிரச்னையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

“சிறப்பான மாணவர்களை உருவாக்குவதற்காக நான் ஸ்ரீ முருகன் மையத்திற்கும் உதவியுள்ளேன்”, என்று கூறிய அவர், அம்முயற்சியின் காரணமாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றி மேல் நோக்கிச் சென்றுள்ளது. இதனால், 2009 மற்றும் 2011 ஆண்டுகளுக்கிடையிலான யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் 7எக்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 47 விழுக்காடு ஏற்றம் கண்டது என்றாரவர்.

கடந்த ஆண்டில், யுபிஎஸ்ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 53 விழுக்காட்டை அடைந்து புதிய சாதணை படைத்துள்ளது. எதிர்காலத்தில் அந்த விழுக்காடு மேலும் முன்னேறும் காணும் என்று நஜிப் நம்பிக்கை தெரிவித்தார்.