கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசுக்குச் சொந்தமான உயர்க்கல்விக் கழகத்திலிருந்து ஐந்து மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்துச் செய்ய வேண்டும் இல்லையேல் அடுத்த பொதுத் தேர்தலில் அவரைப் பதவி இறக்குவோம் என்று சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) எச்சரித்துள்ளது.
“உண்மைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் அம்மாணவர்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை….அசிசான் இப்பிரச்னைக்குத் தீர்வுகாணாமல் செருக்குடன் நடந்துகொள்வாரானால், மாணவர்கள் 13வது பொதுத் தேர்தலில் அவரைப் பதவி இறக்க முழுமூச்சாக போராடுவார்கள், ஆச்சரியப்படாதீர்கள்”, என்றந்த அமைப்பு கூறியது.
கடந்த ஆண்டு மே மாதம் அலோர் ஸ்டாரில் உள்ள காலேஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்ட(யுயுசிஏ)த்தின்கீழ் ஐந்து மாணவர்களை இடைநீக்கம் செய்ததை அசிசான் ஆதரித்திருந்தார்.
பாஸ் மந்திரி புசாரின் நடவடிக்கை, ஆட்சிக்கு வந்தால் குறிப்பிட்ட அச்சட்டத்தை நீக்கப்போவதாக பக்காத்தான் அதன் புக்கு ஜிங்காவில் கூறியுள்ள உறுதிமொழிக்கு முரணாக உள்ளது.
“மாணவர்களின் குரலைப் புறக்கணித்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள அசிசான் ஆயத்தமாக இருக்க வேண்டும்”, என்று மாணவர் கூட்டணி நேற்று விடுத்த அறிக்கையில் கூறிற்று.
“மந்திரி புசாரான அவர், தம் நடவடிக்கை புக்கு ஜிங்காவின் நோக்கத்தைக் குலைத்து விடும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
“பக்காத்தான் தலைமையும் மாணவர் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அசிசான் இன்னமும் விடாப்பிடியாகத்தான் இருக்கிறார்”, என்றந்த அறிக்கை கூறியது.
இன்னொரு அறிக்கையில், எக்சி காமி புரோக்ரசிப்(ஏகேபி) என்ற மூன்று மாணவர் அமைப்புகளின் கூட்டணியும் மாணவர்களின் உரிமைகளை “மதிக்காத” அசிசானைக் கண்டித்தது.
“கொள்கைகளை அடகுவைக்கும் சிலரைப் போல் அல்லாமல் உண்மையைத் துணிச்சலுடன் எடுத்துரைத்த அம்மாணவர்களின் செயலை அசிசான் மதிக்க வேண்டும்”, என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆடம் அலி கூறினார்.
மந்திரி புசார் இடைநீக்கத்தை ரத்துச் செய்து மாணவர்களின் பேச்சுரிமையைப் பாதுகாப்பதாக பக்காத்தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று அக்கூட்டணி வலியுறுத்தியது.