ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏர் ஏசியா மீது வழக்குத் தொடுத்துள்ளனர்

ஆசிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா தனது இணையத் தளத்தில் முழுக் கட்டண விலை விவரங்களை வெளியிடத் தவறியதாக அதன் மீது ஆஸ்திரேலிய அதிகாரிகள் வழக்குப் போட்டுள்ளனர்.

மலேசியாவை தளமாகக் கொண்ட அந்த விமான நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட், மெல்பர்ன், பெர்த் ஆகியவற்றிலிருந்து அனைத்துலகச் சேவைகளை மேற்கொள்கிறது. இவ்வாண்டு ஏப்ரல் தொடக்கம் அது சிட்னியிலிருந்தும் சேவைகளைத் தொடங்குகிறது.

மெல்பர்னில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏர் ஏசியா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பயனீட்டாளர் கண்காணிப்பு அமைப்பாகத் திகழும் ஆஸ்திரேலிய போட்டி, பயனீட்டாளர் ஆணையம் அந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.

ஏர் ஏசியா தனது இணையத் தளத்தில் விற்பனை செய்த சில கட்டணங்களில் அனைத்து வரிகள், தீர்வைகள், கட்டணங்கள், மற்ற தொகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விலைகளைத் தெரிவிக்கவில்லை என அந்த ஆணையம் கூறிக் கொண்டுள்ளது.

“குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவையின் ஒரு பகுதி விலையை மட்டும் விளம்பரம் செய்ய விரும்பும் வர்த்தகங்கள், மொத்தமான ஒரே விலையையும் பெரிதாக காட்டியிருக்க வேண்டும்,” என அது விடுத்த ஊடகக் குறிப்பு கூறியது.

அந்தக் கட்டணங்கள், மெல்பர்னிலிருந்து லண்டன். டெல்லி, சீனாவில் உள்ள ஹாங் சாவ், கோல்ட் கோஸ்ட்டிலிருந்து ஹோ சி மின் சிட்டி, பெர்த்-திலிருந்து தைப்பே, தாய்லாந்தில் உள்ள புக்கெட் ஆகியவற்றுக்கான பயணங்கள் சம்பந்தப்பட்டதாகும்.

அந்த வழக்கு மார்ச் 2ம் தேதி விசாரிக்கப்படுவதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. ”ஏர் ஏசியா எதிர்காலத்தில் தவறான நடத்தையில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான” தடை உத்தரவையும் அந்த ஆணையம் நாடியுள்ளது.

“அந்த நடத்தை தொடர்பாக தனது இணையத் தளங்களில் ஏர் ஏசியா சரியான அறிவிப்புக்களை வெளியிடுவதற்கும்” நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் அது விரும்புகிறது.

அந்த விவகாரம் குறித்து ஏர் ஏசியாவுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

-ஏஎப்பி