போலீஸ், ரௌடி கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது

ABU எனப்படும் ‘அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்னும் அமைப்பு, கடந்த சனிக்கிழமை தான் ஏற்பாடு செய்திருந்த செராமா நிகழ்வை நிறுத்திய ரௌடி கும்பலுடன் ‘போலீசும் ஒத்துழைத்ததாக’ சந்தேகிக்கிறது.

அந்தச் சம்பவம் மீது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் ABU வும் அந்த நிகழ்வின் கூட்டு ஏற்பாட்டாளர்களான ஹிண்ட்ராப்பும் புகார் செய்துள்ளன.

அவை நாளை காலை 11 மணிக்கு சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளன.

ஷா அலாம் ஜாலான் கெபுனில் அமைந்துள்ள மாநகராட்சி மன்றக் கட்டிடத்தில் அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே அதற்கு ரௌடிக் கும்பல் ஒன்று இடையூறை ஏற்படுத்தியது.

அதில் பங்கேற்பாளர் ஒருவர் “கடுமையாக காயமடைந்தார்” என நேரில் பார்த்த ஒருவர் கூறினார். அவர் கைகலப்புக்குப் பின்னர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டது.