கணக்காய்வுத் துறை, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி) மீதான 2010 தணிக்கை அறிக்கை குறித்து விரிவான விளக்கம் அளிக்கும் என்று தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறியுள்ளார்.
விரைவில் வெளிவரவிருக்கும் அவ்விளக்கத்தால் அந்த கால்நடை வளர்ப்புத் திட்டத்தைச் சூழ்ந்துள்ள நெருக்கடி குறித்து ஒரு தெளிவு ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.அம்ப்ரின் மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி விரைவில் விளக்குவேன்”, என்று குறிப்பிட்ட அவர் மேல்விவரங்களை வெளியிடவில்லை.
என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், கணக்காய்வுத் தலைவர் கவனப்படுத்தியுள்ள குளறுபடிகளுக்கும் தம் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விடாப்பிடியாகக் கூறிவரும் வேளையில் அம்ரினின் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
கால்நடை பண்ணையை வைத்து நடத்துவது விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு என்று முகம்மட் சாலே தெரிவித்தார்.
கால்நடைப் பண்ணை அரசுக்குச் சொந்தமானது, என்எப்சி என்பது ஒரு குடும்பத் தொழில்.இரண்டையும் போட்டு கணக்காய்வாளர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றாரவர்.
மாற்றரசுக் கட்சிகளும் என்எப்சி அரசு கொடுத்த கடனைக் கொண்டு ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கியதாகவும் குடும்பத்தாரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்ததாகவும் கடன் அட்டை செலவினங்களை ஈடு செய்ததாகவும் குறைகூறியுள்ளன.
அக்குற்றச்சாட்டுகளை என்எப்சி மறுத்தது. அதன் உற்பத்தி இலக்குகள் அடையப்பட்டுள்ளன என்றும் கொண்டோமினியம்கள் வாங்கப்பட்டதானது சும்மா கிடந்த நிதியைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு முதலீடு என்றும் அது கூறியது.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் கணவருமான முகம்மட் சாலே, என்எப்சி-இன் நிதி பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்ததற்குக் காரணம் இரு முன்னாள் பணியாளர்கள்தான் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.பணிநீக்கம் செய்யப்பட்ட அவர்கள் அந்நிறுவனத்தைக் கீழறுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.