என்எப்சி: குளறுபடி நிலவுவதாக ஏஜி கூறவே இல்லை

கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் கடும் கண்டனத்துக்கு இலக்காகி வந்துள்ள நேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி), தலைமைக் கணக்காய்வாளர் தம் 2010 அறிக்கையில் என்எப்சி-இல் குளறுபடி என்று குறிப்பிடவே இல்லை என்று கூறுகிறது. 

பத்திரிகைச் செய்திகளில் அவ்வாறு குறிப்பிடப்பட்டது “குறும்புத்தனமானது” என்றும் அது “குழப்பத்தை உருவாக்கியுள்ளது” என்றும் என்எப்சி செயல்முறை இயக்குனர் வான் ஷாஹினுர் இஸ்மிர் சாலே இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“தலைமைக் கணக்காய்வாளர் 2010 தணிக்கை அறிக்கையில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நேசனல் ஃபீட்லோட் செண்டரில் எல்லாமே குளறுபடியாக இருப்பதாய்க் குறிப்பிடவே இல்லை.  

“எனவே, அத்திட்டத்தில் குளறுபடி என்று விமர்சிக்கப்படுவது சரியில்லை என்பது தெளிவு.மேலும், தலைமைக் கணக்காய்வாளரை மேற்கோள் காட்டுவதும் தப்பான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டதாகும்”, என்றாரவர்.

அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் மகனான இஸ்மிர், பொதுமக்கள் இணையத்தளத்தில் உள்ள 2010 தலைமைக் கணக்காய்வாளர்(ஏஜி) அறிக்கையைப் படித்து உண்மை அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏஜி 2010 தணிக்கை அறிக்கையில், என்எப்சி, 2010-இல் 8,000 மாடுகளை இறைச்சிக்காக வழங்க வேண்டும் என்ற அதன் இலக்கை அடையவில்லை என்று கூறியிருந்தார். அதற்கு மூன்று காரணங்களையும் அவர் குறிப்பிட்டார். தொழில்முனைவர்களை உருவாக்கும் திட்டம் (இடிபி) அவற்றுள் ஒன்று. அத்திட்டத்தை அது நிறைவேற்றவில்லை.

ஒப்பந்தப்படி, என்எப்சி தனக்குத் தேவையான மாடுகளை வளர்ப்பதற்காக 130 துணை பண்ணைகளை உருவாக்கி இருக்க வேண்டும்.

“டிசம்பர் 31 முடிய என்எப்சி, இடிபி-யைத் தொடங்கவே இல்லை.துணை பண்ணைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக்கூட அது இன்னும் இறுதி செய்யவில்லை”, என்றந்த தணிக்கை அறிக்கை கூறியது.

இன்னொரு காரணம், 2008-இல் அதன் முக்கிய பங்காளி நிறுவனமான லம்பெர்ட்ஸ் விலகிக்கொண்டது.

மேலும், கால்நடை மேய்ச்சலுக்காக புல் வளர்க்கப்பட வேண்டிய பகுதிகளில் கருவேல மரங்கள் மண்டிக் கிடந்ததாகவும் ஏஜி அறிக்கை கூறியது.

என்ஜிஓ-களுக்கு என்எப்சி நன்றி

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் சனிக்கிழமை தன்னுடன் கலந்துரையாடல் நடத்திய 12 என்ஜிஓ-களுக்கு என்எப்சி நன்றி தெரிவித்துக்கொண்டது.

பெர்காசா, மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம், மலேசிய தொழில்முனைவர் மன்றம், தீவகற்ப மலாய் மாணவர் கூட்டமைப்பு முதலிய என்ஜிஓ-கள் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டன.

அத்திட்டத்தைத் தணிக்கை செய்ய தனியார் கணக்காய்வு நிறுவனம் ஒன்று நியமனம் செய்யப்படும் என்ற செய்தியையும் அது வரவேற்றது. அது குழப்பத்தைப் போக்கி ஒரு தெளிவை உண்டாக்குவதுடன் உண்மை நிலவரத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவும் என்றது கூறிற்று.

TAGS: