“நடவடிக்கை எடுக்காத” போலீசை அரசு சாரா அமைப்புக்கள் சாடுகின்றன

ஷா அலாமில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ABU எனப்படும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை” அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வைச் சீர்குலைத்த “ஆக்கிரமிப்பாளர்கள்” மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்க்கா அமான் (Angkatan Warga Aman Malaysia) கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த செராமா நிகழ்வுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசு சாரா 20 இந்திய அமைப்புக்களின் கூட்டணியான அது வினவியது.

“உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தேசிய போலீஸ் படைத் தலைவரும் எங்கே போனார்கள் ? அவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றனர் ? குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நாம் பார்ப்போம்,” அந்தக் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளரான எஸ் பாரதிதாசன் கூறினார்.

“அம்னோ/பிஎன் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”(“Tamatkan Regim Umno/BN”) என்னும் தலைப்பைக் கொண்ட அந்த செராமா நிகழ்வுக்கு ABUவும் ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவும் ஷா அலாம் மாநகராட்சி மன்ற மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தன. அந்த நிகழ்வு கைகலப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டது. கைகலப்பில் ஒருவர் காயமடைந்தார்.

அந்த நிகழ்வில் அத்துமீறி நுழைந்தவர்களுடன் போலீசார் ஒத்துழைத்ததாக சந்தேகம் கொண்டுள்ள ஏற்பாட்டாளர்கள் நேற்றுப் போலீசில் புகார் செய்தனர்.

அந்த “ரௌடிக் கும்பல் ஒன்று” ABU செராமா நிகழ்ச்சிக்கு இடையூறு செய்து பங்கேற்பாளர்கள் மீது இனத் துவேஷ வார்த்தைகளை கூறினர் என்றும் மண்டபத்தைக் காலி செய்யுமாறு ஆணையிட்டனர் என்றும்  சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

“அத்தகைய குண்டர்தனம் நிறுத்தப்பட வேண்டும். ஒன்று கூடுவதற்கும் பேசுவதற்கும் தங்களுக்கு உள்ள அரசமைப்பு உரிமையை பயன்படுத்தும் குடிமக்களைப் பாதுகாப்பது போலீஸின் கடமையும் பொறுப்பும் ஆகும்.’

“ஆனால் போலீஸ் அந்த விவகாரத்தை மழுப்புகின்றது. அந்தக் குழப்பத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் கூறுகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்காததின் மூலம் போலீசார், குண்டர்களுடன் நிச்சயம் ஒத்துழைத்துள்ளனர்,” என்றார் பாரதிதாசன்.

யாரும் தாக்கப்படவில்லை என்றாலும் அதிகாரிகள் அந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், “ஏனெனில் அந்தச் சம்பவம் மிகவும் கடுமையானதாக மாறக் கூடிய சாத்தியம் நிறைய இருக்கிறது,” என்றார்.