ஷா அலாமில் கடந்த சனிக்கிழமை ABU என்ற அம்னோவை தவிர வேறு எதுவாகவும் இருந்தாலும் பரவாயில்லை” அமைப்பு ஏற்பாடு செய்த செராமாவுக்கு இடையூறு ஏற்பட்டது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகப் போலீசார் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் மாணவர்களும் எஸ்பிஎம் படிப்பை முடித்தவர்களும் வேலை இல்லாதவர்களும் அடங்குவர் என ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஸாஹேடி அயோப் கூறினார்.
நேற்றுப் பிற்பகலும் இன்று அதிகாலையும் அவர்கள் இரண்டு தொகுதிகளாகக் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபர்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும் அவர் விளக்கினார். என்றாலும் அவர்கள் போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் அல்லது பொது அமைதியின்மையின் போது கம்புகள் உட்பட ஆயுதங்களை வைத்திருப்பது சம்பந்தப்பட்டது, 148வது பிரிவாகும்.
“எதுவும் நடக்கவில்லை”
ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவுடன் கூட்டாக ஜாலான் கெபுனில் உள்ள ஷா அலாம் மாநகராட்சி மன்ற மண்டபத்தில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு, கம்புகளை வைத்திருந்த கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டது.
அங்கு நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் காயமடைந்தார். அவர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“எதுவும் நடக்கவில்லை” என இதற்கு முன்னர் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா கூறியிருந்தார். என்றாலும் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் அந்த நிகழ்வு குறித்து மகிழ்ச்சி கொள்ளவில்லை என்றார் அவர்.
ABU அந்தச் சம்பவம் பற்றி நேற்றுப் போலீசில் புகார் செய்தது.
விசாரணைகளுக்கு உதவக்கூடிய இன்னும் பல உள்ளூர் குடியிருப்பளர்களைத் தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாலவும் ஷா அலாம் தமது அலுவலகத்தில் ஸாஹேடி கூறினார்.
அங்கு நிகழ்ந்த கலவரத்துக்குப் போலீஸ் ஒத்துழைத்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார். அந்த செராமாவுக்கு இடையூறு ஏற்படும் வரையில் போலீசுக்கு எதுவும் தெரியாது என்பதே போலீஸ் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என ஸாஹேடி மேலும் கூறினார். சில தரப்புக்கள் கூறுவது போல முன் கூட்டியே போலீசுக்கு தெரியாது என்றார் அவர்.
அந்தச் சம்பவத்தின் போது சேதம் ஏதும் ஏற்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.
“பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்.”
இது போன்ற நிகழ்வுகளுக்கும் செராமாக்களுக்கும் ஏற்பாடு செய்கின்றவர்கள் முன் கூட்டியே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஸாஹேடி கேட்டுக் கொண்டார். அப்போதுதான் போலீஸ் தயாராக இருக்க முடியும் என்றார் அவர். அத்துடன் அந்த நிகழ்வுகள் குறித்து யாருக்கும் வருத்தம் ஏற்படாமல் தவிர்க்க சொற்பொழிவுகளின் சாராம்சம் உள்ளூர் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்றார் அவர்.