கணக்காய்வுத் துறை, தேசிய ஃபீட்லோட் செண்டர் மீதுதான் தணிக்கை செய்ததே தவிர நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) மீது அல்ல என்று விளக்கமளித்து தலைமைக் கணக்காய்வாளர் நேற்று அறிக்கை விடுத்திருப்பதால் அங்கு அத்துமீறல்கள் நிகழவில்லை என்றாகிவிடாது.
இதை நேற்று டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்திய பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் (இடம்), அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில் குடும்பத்தாருக்குச் சொந்தமான “என்எப்சி-இல் பணம் தவறான முறையில் செலவிடப்பட்டுள்ளது உண்மையே” என்றார்.
“தலைமைக் கணக்காய்வாளர் தேசிய ஃபீட்லோட் செண்டர் மீதுதான் தணிக்கை செய்தார் என்எப்சி நிறுவனத்தில் அல்ல என்பது உண்மைதான். என்றாலும்கூட அதனால் பொதுமக்கள் பணமான ரிம250மில்லியன் தவறாகக் கையாளப்பட்டிருக்கிறது என்ற உண்மை மாறி விடாது”, என்றாரவர்.
அந்நிறுவனம் அரசாங்கம் அதற்கு வழங்கிய ரிம250மில்லியன் கடனில் ரிம81,222,448.93-ஐ அக்குடும்பத்துக்குச் சொந்தமான நேசனல் லைப்ஸ்டோக் அண்ட் மீட் கார்ப்பரேசனுக்குத் திருப்பி விட்டது.
அப்பணத்தில் ஒரு பகுதி, பங்சாரில் ஒன் மெனுரோங் வளாகத்தில் இரண்டு ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது என்றவர் கூறினார்.
ஷாரிசாட்டின் கணவர் முகம்மட் சாலே இஸ்மாயில் மற்றும் அவர்களின் பிள்ளைகளால் நடத்தப்படும் என்எப்சி, அவர்களுக்குச் சொந்தமான ரியல் ஃபூட் நிறுவனத்துக்கும் பணத்தை மாற்றி விட்டிருக்கிறது.
ரியல் ஃபூட் நிறுவனம் மூன்று ஆடம்பர உணவகங்களை நடத்தி வருகிறது.
“என்எப்சி, கோலாலம்பூரிலும் சிங்கப்பூரிலும் கொண்டோமினியம்கள் வாங்கியது, புத்ரா ஜெயா பிரிசிங்ட் 10-இல் நிலம் வாங்கியது, வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கு ரிம823,000 செலவிட்டது, ரியல் ஃபூட்டுக்கு ரிம2,964,555 மாற்றிவிட்டது எனப் பல விசயங்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.
“ஏஜி அவரது வேலையைச் செய்து முடித்ததற்குப் பாராட்டுகிறேன். இனி, போலீசும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அவற்றின் கடமையைச் செய்யவேண்டும். முழு ஒத்துழைப்பு வழங்க பிகேஆர் தயார்”, என்று நசுத்தியோன் கூறினார்.
நேற்று தலைமைக் கணக்காய்வாளர் (ஏஜி) அம்ப்ரின் புவாங், 2010 கணக்கறிக்கை என்எப்சியில் குளறுபடி நிலவுவதாகவோ பணக் கையாடல் நிகழ்திருப்பதாகவோ குறிப்பிடவில்லை என்று கூறி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், தாங்கள் தணிக்கை செய்தது ஃபீட்லோட் திட்டத்தைத்தானே தவிர அந்த நிறுவனத்தை அல்ல என்றும் அவர் விளக்கியிருந்தார். ஃபீட்லோட் அதன் இலக்குகள் பலவற்றை நிறைவேற்றவில்லை.இதற்கு என்எப்சி ஒப்புக்கொள்ளப்படி அதன் கடப்பாடுகளை செய்து முடிக்காததுதான் காரணமாகும் என்றாரவர்.
இதன் தொடர்பில் நேற்று ஒரு தனி அறிக்கை வெளியிட்டிருந்த என்எப்சி நிர்வாக இயக்குனர் வான் ஷாஹினுர் இஸ்மிர் சாலே, பொதுமக்கள் ஏஜியின் அறிக்கையைப் படித்து உண்மை அறிய வேண்டும் என்றும் சில தரப்புகள் “தப்பாக சொல்வதைக் கேட்டு” என்எப்சி “குளறுபடி”யில் சிக்கிக்கொண்டிருப்பதாக நினைத்துவிடக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதன் தொடர்பில் என்எப்சி,தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்க ஏற்கனவே பல என்ஜிஓ-களோடு கலந்துரையாடல் நடத்தியுள்ளது.மேலும் சில சமூக அமைப்புகளை அது சந்திக்கத் திட்டம் போட்டிருப்பதாகவும் தெரிகிறது.
அந்நிறுவனம் இன்று காலை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது.அதில், அம்ப்ரினின் விளக்கத்துக்கு நன்றி கூறிக்கொண்டதுடன் அது “பல மாதங்களாக நிகழ்ந்துவந்த கடும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது”என்றும் கூறியது.