முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹசன் அலி சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இல்லையேல் அவருடைய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எச்சரித்துள்ளார்.
மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் அஸ்மின் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசன் அலி, தொடர்ந்து பக்காத்தான் கூட்டணியைத் தாக்கி வந்தால் ஹசன் அலியின் பின்னிருந்து அவரை இயக்கி வருவோரை அம்பலப்படுத்த பக்காத்தான் தயங்காது என்றாரவர்.
“அதற்குப் பதிலடி கொடுக்க நாங்கள் தயார்….அவரின் பலத்தையும் அவரை ஆதரிப்பவர்களையும் நன்கறிவோம். ஹசன் அலிக்குப் பின்னே இருப்பவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும்”, என்றாரவர்.
ஹசன் அலி கட்சியிலிருந்து விலக்கப்பட தாம் அல்லது அன்வார் இப்ராகிம்தான் காரணம் என்று கூறப்படுவதையும் அஸ்மின் (வலம்) மறுத்தார்.
“எங்களைக் குறை சொல்லாதீர்கள்….எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை. இது பாஸ் செய்த முடிவு”, என்றாரவர்.
பாஸில் “புல்லுருவி”யாக இருந்தவர் ஹசன். ஆனால், அவர் மற்றவர்களைப் புல்லுருவிகள் என்று கூறிவந்தார் என்றும் அஸ்மின் குறிப்பிட்டார். “உள்ளுக்குள் எதிரி”யாக இருந்ததால்தான் பாஸ் அவரைக் கட்சியிலிருந்து விலக்கியது என்றாரவர்.
உறுதியான முடிவெடுத்த பாஸ் தலைமையை மதிப்பதாகவும் அஸ்மின் கூறினார்.