பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை தாழ்ந்துள்ளது.

2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டுக்கான பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை மிகவும் தாழ்ந்துள்ளது.

இவ்வாறு எல்லை இல்லாத நிருபர்கள் என்னும் அனைத்துலக கண்காணிப்புக் குழு கூறுகிறது.

என்றாலும் உலக அளவில் மலேசியாவின் நிலை 19 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளது. அதற்குக் காரணம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுடைய நிலை சரிந்ததாகும்.
 
2011ம் ஆண்டுக்கான  பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் 56 மதிப்பெண்களுடன் மலேசியா 122வது இடத்தில் இருந்தது. அந்த 56 மதிப்பெண்கள் 2009ம் ஆண்டைக் காட்டிலும் 12 புள்ளிகள் குறைவாகும்.

பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டுக்காக மொத்தம் 179 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஆசிய நாடுகளில் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது. அதன் இடம் 22வது ஆகும். இரண்டாவது நிலையில் உள்ள ஹாங்காங் 54வது இடத்தில் உள்ளது.

என்றாலும் மலேசியா மற்ற தென் கிழக்காசிய நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் (135) தாய்லாந்து (137), பிலிப்பீன்ஸ் (140), இந்தோனிசியா (146), வியட்னாம் (176)

பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அம்சங்கள்

இணைய குடிமக்கள், ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள், தணிக்கை முறைகள், நிதி ரீதியிலான அழுத்தம், உள்ளூர் ஊடகங்களின் சுதந்தரம் ஆகியவை உட்பட 44 முக்கிய அம்சங்களை பாரிஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எல்லை இல்லாத நிருபர்கள் அமைப்பு பரிசீலினனக்கு எடுத்துக் கொண்டது.

அந்த அமைப்புடன் இணைந்துள்ள 18 அரசு சாரா அமைப்புக்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நிருபர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் நடுவர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டு விவரங்கள் திரட்டப்பட்டன.