பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள கெடா, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்களும் Felda Global Ventures Holdings Bhd (FGV) என்னும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறவிருக்கும் நிறுவனத்துக்குத் தங்கள் மாநிலங்களில் உள்ள நில உரிமையை வழங்கும் எந்த ஒரு நில உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்துள்ளன.
பெல்டா குடியேற்றக்காரர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும், பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அனாக் அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் அந்தத் தகவலை வெளியிட்டார்.
அந்த நில உடன்பாடுகள் ஒரு தரப்பானவை என்றும் குடியேற்றக்காரர்களுக்கும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் பெல்டா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கும் எந்தப் பயனையும் அளிக்காது என்றும் பக்காத்தான் மாநிலங்கள் கருதுவதாக அவர் சொன்னார்.
“நிலத்தை FGVக்கு மாற்றி விட ஒப்புக் கொள்ளும் எந்த உடன்பாட்டிலும் பாகாங் உட்பட இது வரை எந்த மாநிலமும் எனக்குத் தெரிந்த வரை கையெழுத்திடவில்லை. இந்த நாட்டில் பெல்டா திட்டத்தின் கீழ் அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ள மாநிலம்-மொத்தம் 143,000 ஹெக்டர்- பாகாங் ஆகும்.”
“அதில் கையெழுத்திடத் தாம் தயார் என பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் கூறியுள்ளதாக எனக்குத் தெரிய வந்தாலும் அவர் இன்னும் அவ்வாறு செய்யவில்லை. அதே போன்று மற்ற மாநிலங்களும் செய்யவில்லை. நிலத்தை FGVக்கு மாற்றி விடப் போவதில்லை என்ற வாக்குறுதியைத் தாம் மூன்று பக்காத்தான் மாநிலங்களிடமிருந்தும் பெற்றுள்ளேன்,” என்றார் அவர்.
பாஸ் மத்தியக் குழு எடுத்துள்ள அந்த நிலைக்கு சிலாங்கூர் உட்பட எல்லா மூன்று மாநிலங்களும் ஏற்றுக் கொண்டிருப்பதாக மஸ்லான் தெரிவித்தார்.
“நில விவகாரங்கள் இன்னும் மாநில அரசாங்க அதிகாரத்துக்கு உட்பட்டவையாகும். நிலத்தை மாற்றி விடுவதற்கான அதிகாரம் மாநில அரசாங்கத்திடம்தான் உள்ளன,” என்று மஸ்லான் இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
பக்காத்தான் கட்டுக்குள் இருக்கும் இன்னொரு மாநிலமான பினாங்கில் எந்த பெல்டா நிலத் திட்டமும் கிடையாது.