தேசிய விலங்குக் கூட மையத்தை சுற்றியுள்ள பிரச்னைகள் மீதான விசாரணையை நாடாளுமன்ற அமைப்பான பொதுக் கணக்குக் குழு தாமதப்படுத்துவது எனச் செய்துள்ள முடிவை அதன் தலைவர் அஸ்மி காலித் நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
ஒரே நேரத்தில் என்எப்சி மீதான புலனாய்வை தொடங்கிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் போலீஸும் முடித்துக் கொள்ளும் வரையில் பொதுக் கணக்குக் குழு தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தமது கருத்து என்பதை அஸ்மி ஒப்புக் கொண்டார்.
“ஒரே மாதிரியான ஆவணங்களும் மக்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் மற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வேலைகளை முடிக்கும் வரையில் பொதுக் கணக்குக் குழு தனது விசாரணைகளை நிறுத்தி வைப்பது வழக்கமானதே,” என்று அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
“நாங்கள் அந்த விவகாரத்தை மூடி விட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. விசாரனைக்கு பொதுக் கணக்குக் குழு பரிந்துரைத்துள்ள அம்சங்கள் அனைத்தும் போலீஸுக்கும் எம்ஏசிசி-க்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆவணத்தையும் சரி பார்க்கும் தடயவியல் வசதிகள் எங்களிடம் கிடையாது,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அஸ்மி கூறினார்.
என்எப்சி மீதான பொதுக் கணக்குக் குழு விசாரணையைத் தாமதப்படுத்துவதற்காக அதன் தலைவர் பதவி விலக வேண்டும் என ஈப்போ தீமோர் எம்பி-யுமான டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டது மீது அஸ்மி காலித் பதில் அளித்தார்.
அந்த விசாரணைக்குத் “தடையாக இருக்க வேண்டாம்” என அஸ்மியை வலியுறுத்திய லிம், பொதுக் கணக்குக் குழு தனது விசாரணையைத் தொடங்கி மார்ச் மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது தனது அறிக்கையை முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.