ஏர் ஏசியா, கட்டணங்கள் பற்றிய பிரச்னையை அறியவில்லை

ஏர் ஏசியா இணையத் தளத்தில் குறிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆஸ்திரேலிய போட்டி பயனீட்டாளர் ஆணையம் (ஏசிசிசி) வழக்குத் தொடரும் வரையில் தான்  அறிந்திருக்கவில்லை என அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் கூறுகிறது.

“ஏசிசிசி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக எங்களுக்கு அந்த விஷயம் தெரியாது என நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என மலேசியாகினிக்கு அது  விடுத்த அறிக்கை தெரிவித்தது.

என்றாலும் அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறிய ஏர் ஏசியா, “அந்தப் பிரச்னை எங்களுக்கு தெரிய வந்ததும் நாங்கள் எங்கள் இணையத் தளத்தில் அந்தப் பிரச்னையைத் தீர்த்து விட்டோம்,” எனக் குறிப்பிட்டது.

ஏர் ஏசியா தனது இணையத் தளத்தில் விளம்பரம் செய்துள்ள சில கட்டணங்களில் அனைத்து வரிகளும் தீர்வைகளும் மற்ற கட்டணங்களும் சேர்க்கப்படவில்லை என அதன் மீது வழக்குத் தொடர்ந்துள்ள ஆஸ்திரேலிய பயனீட்டாளர் கண்காணிப்பு அமைப்பான  ஏசிசிசி கூறியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது இணையத் தளத்தில் ஏற்பட்ட கோளாறு பிரச்னைக்குக் காரணம் என்றும் ஏர் ஏசியா விளக்கியது.

“சம்பந்தப்பட்ட பயணச் சேவைகள் தொடர்பான எல்லா வரிகளும் கட்டணங்களும் வாடிக்கையாளர்களுக்கு காட்டப்பட்டதா என்ற பிரச்னை தகவல் தொழில்நுட்பப் பிரச்னையால் எழுந்தது”,   என்றும் ஏர் ஏசியா கூறியது.

“என்றாலும் அண்மையில் ஏர் ஏசியா x தொடங்கிய சிட்னி-கோலாலம்பூர் பாதைக்கான ஆஸ்திரேலிய டாலர் 99 என்னும் விளம்பரக் கட்டணத்தை அந்தப் பிரச்னை பாதிக்காது,” என்றும் அது தெரிவித்தது.

அந்த நாட்டின் கூட்டரசு நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் 17ம் தேதி ஏசிசிசி வழக்கைச் சமர்பித்த பின்னர் அது தெரிவித்த குற்றச்சாட்டுக்களை ஏர் ஏசியா ஆய்வு செய்தது.

“பயனீட்டாளர்களுக்கான தனது சட்டப்பூர்வ, அன்றாடக் கடமைகளை நிறுவனம் கடுமையாக எடுத்துக் கொள்கிறது. ஏசிசிசி-யின் கோரிக்கைகளில் அடங்கியுள்ள விஷயங்களை மிகவும் கவனமாக மறு ஆய்வு செய்யும்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பொருத்தமான அனைத்துச் சட்டங்களுக்கு ஏற்ப தனது வர்த்தகத்தை நியாயமாகவும் நேர்மையாகவும் சரியான முறையிலும் நடத்துவதையே தான் நாடுவதாக” அந்த விமான நிறுவனம் மேலும் தெரிவித்தது.

ஏசிசிசி-யுடன் அந்த விவகாரத்தை “ஆக்கப்பூர்வமான” முறையில் தீர்த்துக் கொள்ளவும் தான் உறுதிபூண்டுள்ளதாகவும் ஏர் ஏசியா கூறியது.

மார்ச் மாதம் 2ம் டேதி மெல்பர்னில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் திட்டமிடப்பட்டுள்ள மாநாடு ஒன்றில் அந்த வழக்கு விவாதிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.