ABU-உடனான “இணைப்பு” மீது ஹிண்ட்ராப் தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர்

ஏபியூ (ABU) என அழைக்கப்படும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பில் தனது ஆதரவாளர்கள் ஈடுபாடு கொள்வது மீது ஹிண்ட்ராப் (இந்து உரிமை  நடவடிக்கைக் குழு) தலைவர்கள் பிளவுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

கடந்த சனிக்கிழமை ஷா அலாமில் ஏபியூ ஏற்பாடு செய்திருந்த செராமாவுக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நிலை உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் ஏபியூ கூட்டங்களைத் தவிர்க்குமாறு உறுப்பினர்களை ஹிண்ட்ராப் மூத்த தலைவரும் சட்ட ஆலோசகருமான (de facto leader, legal advisor)பி உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் ஏபியூ-வைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என அந்தக் குழுவின் தலைவர் ( chairperson ) பி வேதமூர்த்தி விரும்புகிறார்.

டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற்ற தனது ஆண்டு மாநாட்டில் ஹிண்டராப் எந்த எதிர்த்தரப்புடனும் இனைந்து வேலை செய்ய முடிவு செய்ததாக இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்த வேதமூர்த்தி, தமது மூத்த சகோதரரான உதயகுமார் விடுத்த அறிக்கையையும் நிராகரித்தார்.

 “ஏபியூ-உடன் நாம் சம்பந்தப்படுவது தொடர்பாக மனித உரிமைக் கட்சியின் தலைமைச் செயலாளர் உதயகுமார் விடுத்த உத்தரவுகள் மீது  அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் அவரது சொந்தக் கருத்தாகும். ஹிண்டராப்பில் உள்ள நாங்கள் அவருடைய கருத்துக்களை மதிக்கிறோம். என்றாலும் கூட்டாக நாங்கள் அவரது சொந்தக் கருத்துக்களிலிருந்து வேறுபடுகிறோம்.”

“ஹிண்ட்ராபின் குரல் அடி நிலையில் உள்ள ஆதரவாளர்களுடைய எண்னங்களின் கலவை ஆகும். அது தனி நபர்  ஒருவரை அடிப்படையாகக் கொண்டதல்ல,” என நாடு கடந்து வாழும் அந்தத் தலைவர் சொன்னார்.

ஏபியூ-வை ஆதரிப்பதில்லை என ஹிண்ட்ராப் முடிவு செய்துள்ளதாக ஹிண்ட்ராப் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸ் வெளியிட்ட அறிக்கைக்கு வேதமூர்த்தி பதில் அளித்தார்.

உதயகுமார் தலைமையில் நேற்றுக் கூடிய ஹிண்ட்ராப் உச்சமன்றக் கூட்டம் அந்த முடிவைச் செய்தது.

“ஏபியூ-வை ஹிண்ட்ராப் ஆதரிக்கவில்லை. ஆனால் அம்னோ, பக்காத்தான் ராக்யாட் இனவாதத்தை தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னும்  ABURஐ ஆதரிக்கிறது.”

“ஏபியூ நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ள எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டாம் என நாடு தழுவிய நிலையில் உள்ள ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஷா அலாம் ஜாலான் கெபுனில் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து அவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிகழ்ந்த வன்முறையில் காயமடைந்த ஹிண்ட்ராப் ஆதரவாளர் ஒருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றும் பலர் தாக்கப்பட்டுள்ளனர்,” என அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க ஏபியூ-வும் பக்காத்தான் ராக்யாட்டும் தவறி விட்டதாக நேற்று விடுத்த அறிக்கையில் ஹிண்ட்ராப் சாடியது.

“அம்னோ/பிஎன் அல்லது பக்காத்தான் ராக்யாட்டின் கண்மூடித்தனமான ஆதரவாளராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு ஹிண்ட்ராப் ஒரு போதும் தன்னை அனுமதிக்காது,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.