லிபிய ஆயுதக்குழுக்களின் அட்டகாசம் குறித்து ஐநா கவலை

லிபியாவில் செயற்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியீனத்தை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான மக்களை தடுப்பு முகாம்களில் தடுத்தும் வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் லிபியாவுக்கான தூதுவர் இயான் மார்ட்டின் கூறியுள்ளார்.

பாதுகாப்புச் மன்றத்தில் உரையாற்றிய இயான் மார்ட்டின், அண்மையில் லிபியாவின் பானி வாலிட் நகரில் நடந்த மோதல்களும், பென்காசி நகரில் காணப்படுகின்ற அமைதியீனமும், இந்த ஆயுதக்குழுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் இயலாமையை கோடிகாட்டுகின்றன என்று கூறினார்.

முன்னாள் தாக்குதலாளிகளை கலைக்கும் நடவடிக்கைகளில் இடைக்கால அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால், ஆயுதங்கள் மற்றும் ஆயுதக்குழுக்களில் அதிகரிப்பு தொடர்பில் அதனால் சரியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இடைக்கால அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் இயான் மார்ட்டின் கூறியுள்ளார்.

அதேவேளை, கடாபியின் முன்னாள் ஆதரவாளர்கள் ஆயுதக்குழுக்களால் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

“2011-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை 60 இடங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8500 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சென்று பார்வையிட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருப்போரில் பெரும்பான்மையானவர்கள் கடாபியின் ஆதரவாளர்கள் என்று குற்றஞ்சாட்டப்ப்பட்டுள்ளார்கள், அவர்களில் பெருமளவிலானவர்கள் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்த தடுப்பு முகாம்களை மத்திய அரசின் அதிகாரிகளால் கண்காணிப்பதற்கான வசதிகள் இல்லாததால், அங்கு சித்ரவதை மற்றும் மோசமாக நடத்துதல் போன்றவை நடக்கின்றன” என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.