கோலாலம்பூர் ஜாலான் கிள்ளானில் உள்ள டியூசன் மையம் ஒன்று முஸ்லிம்களைக் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்ற முயற்சி செய்வதாக டிவி 3 வெளியிட்ட செய்தி ஜோடிக்கப்பட்டது என குற்றம் சாட்டி அரசு சாரா அமைப்பு ஒன்று போலீசில் புகார் செய்தது.
அந்த மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அது வெளியிட்ட செய்தியில் கூறப்பட்ட சூராவும் உண்மையில் இல்லை என்றும் அது கூறியது.
அந்தத் தனியார் தொலைக்காட்சி நிலையம் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி தனது முக்கிய செய்தி அறிக்கையில் (Buletin Utama) அந்த டியூசன் மையம் முஸ்லிம் மாணவர்களிடையே கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பி வருவதாக கூறும் தகவல் ஒன்றை வெளியிட்டது என ஜிங்கா 13 எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பு தெரிவித்தது.
சிப்புத்தே அம்னோ தொகுதித் தலைவர் முஸ்தாபா கமால் முகமட் யூசோப் தலைமையில் குவாரியா சூராவ் அல் முஸ்ரிக்கினைச் ( Qariah Surau Al-Musyrikin ) சேர்ந்த 50 பேர் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதை ஆட்சேபிக்கும் பொருட்டு அந்த மையத்துக்கு முன்பு ஒன்று கூடியதாகக் கூறும் செய்தி ஒளிநாடாவையும் ஒளிபரப்பியது.
“டியூசன் வகுப்புகள் வழியாக கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்யப்படுவதாக சித்தரிப்பதே அந்தத் தகவலின் நோக்கமாகும். அதனால் சூராவ் உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர் எனத் தெரிவிப்பதும் அதன் நோக்கமாகும்,” என ஜிங்கா 13ன் ஒருங்கிணைப்பாளரான பேரிஷ் மூசா வருத்தத்துடன் கூறினார்.
ஆனால் தாங்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது அந்தப் பகுதியில் அத்தகைய சூராவ் ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை என அவர் சொன்னார்.
“அந்த டியூசன் மையத்துக்கு அருகில் உள்ள ஜாலான் கிள்ளான் லாமா புறம்போக்குக் குடிசைப் பகுதியில் ஜிங்கா 13 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுடனும் பேசினோம். அங்கு ஒரு சூராவ் கூட இருப்பதாகத் தெரியவில்லை”, என பிகேஆர் நிர்வாக மன்ற உறுப்பினருமான பேரிஷ் கூறினார்.
“அந்த டியூசன் மையம் சீனர்களும் இந்தியர்களும் அதிகமாகவும் சில அந்நிய இந்தோனிசியர்களும் வசிக்கும் புறம்போக்குக் குடிசைப் பகுதியில் அமைந்துள்ளது.”
“டி 3 யில் குறிப்பிடப்பட்ட சூராவும் குவாரியாவும் இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,” என்றார் அவர்.
அந்தப் பகுதியில் வசிக்கும் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவ சமயத்தைப் போதிப்பதற்காக அந்த டியூசன் மையம் பல ஆண்டுகளாக அங்கு இயங்கி வருவதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்ததாகவும் பேரிஷ் சொன்னார்.
“மாணவர்களில் சீனர்களும் இந்தியர்களும் சிறிய எண்ணிக்கையிலான கிறிஸ்துவ இந்தோனிசியர்களும் அடங்குவர்.”
கிறிஸ்துவ சமய வகுப்புக்களில் முஸ்லிம்கள் யாரும் இல்லை,” என்றார் அவர்.
பொய்யான செய்தியை தீய நோக்கத்துடன் பரப்பியதாக அந்த தொலைக்காட்சி நிலையத்துக்கு எதிராக அந்த அரசு சாரா அமைப்பு ஷா அலாம் போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் புகார் செய்தது. இன, சமய பதற்றநிலையை உருவாக்குவது அதன் நோக்கம் என்றும் அது கூறியது.
இதனிடையே அந்த சம்பந்தப்பட்ட செய்தி அறிக்கை டிவி 3 இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.