பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் ஆபாச வீடியோ என்ற ஒன்றைத் திரையிட்டுக் காண்பித்த மூவரடங்கிய ‘டத்தோ டி’ கும்பல், அன்வார் தங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தால் இன்னொமொரு “ஆபாச வீடியோ” வை வெளிப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
இப்புதிய செக்ஸ் வீடியோ தாய்லாந்தில் ஜனவரி 12, 13-இல் பதிவு செய்யப்பட்டது என்று முன்னாள் பெர்காசா பொருளாளர் ஷுயுப் லாசிம்(வலம்) கூறியதாக மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியாவின் முதல்பக்கச் செய்தி கூறியது.
“எஸ்கே கொடுத்த அந்த வீடியோவை நான் பார்த்து விட்டேன். அன்வார் எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் எஸ்கே அதனை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பார்”, என்றாரவர். எஸ்கே என்பவர் டத்தோ டி கும்பலில் உள்ள ஷஸ்ரில் எஸ்கே அப்துல்லா ஆவார்.மூவரடங்கிய அக்கும்பலின் மற்றுமொரு உறுப்பினர் முன்னாள் மலாக்கா மந்திரி புசார் அப்துல் ரஹிம் தம்பி சிக்.
கடந்த மார்ச் மாதம் வெளிப்படுத்திய வீடியோவில் இருப்பது தாம் அல்ல என்று அன்வரால் தடயவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முடியுமா? அப்படிச் செய்ய முடிந்தால் அன்வார் தங்கள் மூவர்மீதும் வழக்கு தொடுக்கலாம் என்று ஷ்யுப் கூறினார்.
செய்தியாளர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட அந்த முதலாவது வீடியோ அன்வார்போல் தோற்றமளிக்கும் ஓர் அடவர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதைக் காண்பித்தது.
அந்த வீடியோவில் இருப்பது தாம் அல்ல என்று மறுத்து அன்வார் போலீசில் புகார் செய்தார். டத்தோ டி கும்பல்மீது ஆபாச வீடியோவைத் திரையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.