துணைப் பிரதமர்: ஹிம்புனில் தனது உறுப்பினர்கள் பங்கு கொள்ள பாஸ் ஏன் தடை விதிக்க வேண்டும் ?

முஸ்லிம்களுடைய சமய நம்பிக்கையை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட ஹிம்புன் கூட்டங்களில் தனது உறுப்பினர்கள் பங்கு கொள்வதற்கு பாஸ் கட்சி தடை விதித்துள்ளதாகக் ஹசான் அலி கூறியுள்ளது பற்றி பாஸ் விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் உண்மையை அறிந்து கொண்டு முடிவு செய்யும் பொருட்டு முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் விடுத்த அந்தக் குற்றச்சாட்டு மீது பாஸ் தலைமைத்துவம் விளக்க வேண்டும் என முஹைடின் சொன்னார்.

“இஸ்லாத்தில் நம்பிக்கை மிகவும் முக்கியமான அம்சமாகும். பாஸ் கட்சியில் உள்ள பல உறுப்பினர்கள் அந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கவில்லை என முன்னாள் பாஸ் தலைவர் ஒருவர் கூறினால் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் நிலமையை சொந்தமாக மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.”

“அது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு, பாஸ் அதனை முன் வந்து மறுக்க வேண்டும். ஹசான் மிகவும் அறிவாற்றல் மிக்க மனிதர் ஆவார். அவர் அவ்வாறு சொன்னதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும்.”

“பாஸ் அதனை ஒப்புக் கொள்ளாவிட்டால் பாஸ் அதனை மறுக்க வேண்டும்,” என முஹைடின் பாகோ, புக்கிட் பாசிரில் ஒரே மலேசிய மக்கள் உதவித் தொகையை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“பாஸ் கட்சியின் இலட்சியம் என்ன ? பாஸ் உண்மையில் ஒர் இஸ்லாமியக் கட்சியா அல்லது நடத்தையில் வெறும் மேலோட்டமானதா ?” என்றும் அவர் வினவினார்.

அந்தக் கேள்விகளை  இந்த நாட்டில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதாரும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்,” என்றும் துணைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.