அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் ஆகியோரது சொத்து விவரங்களை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வைத்திருப்பது பொருத்தமானதாக இருக்காது என பிரதமர் துறை துணை அமைச்சர் விகே லியூ கூறுகிறார்.
அதற்குக் காரணம், இந்த நாட்டில் ஊழல் மீதான புகார்களை ஏற்றுக் கொண்டு அவற்றை விசாரிப்பதே எம்ஏசிசி-யின் முக்கியமான பணியாகும் என்று அவர் சொன்னார்.
“அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் ஆகியோரது சொத்து விவரங்களை வைத்திருப்பது எம்ஏசிசி தலைவருடைய வேலை அல்ல.”
“என்னைப் பொறுத்த வரையில் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்படும் போது எங்கள் சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு எங்களுக்குக் கூறப்பட்டது. நாங்களும் அதனைச் செய்துள்ளோம்,” என அவர் கோத்தா கினாபாலுவில் நிருபர்களிடம் கூறினார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் அவர்களது துணைவியர்/துணைவர்கள் ஆகியோர் அறிவித்த சொத்து விவரங்களின் பிரதியை எம்ஏசிசி-க்கு கொடுக்கட வேண்டும் என எம்ஏசிசி ஆலோசகர் குழுத் தலைவர் ஜைத்தோன் ஸாவியா பூத்தே அண்மையில் கேட்டுக் கொண்டது பற்றிக் கருத்துரைக்குமாறு லியூ-விடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.