ஈமச்சடங்கிற்குரிய வெள்ளை உறையில் “அங்பாவ்” வழங்கினார் இப்ராகிம் அலி

மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்காசா அதன் முதல் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 300 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் குடியிருப்பாளர்களும் சுமார் ரிம10,000 ஐ அங்பாவாக வழங்கிற்று.

பெர்காசா தலைவர்கள் சீன புத்தாண்டிற்கான அங்பாவ் சீனர்கள் ஈமச்சடங்கிற்கு பயன்படுத்தும் வெள்ளை உறையில் வைத்து கொடுத்தனர்.

வெள்ளை உறைகள் தீர்ந்து போய்விட்ட பின்னர், ரொக்கமாக கொடுத்தனர்.

கம்போங் பாரு குடியிருப்பாளர்கள் அங்பாவ் வழங்கப்படுவதைக் கேள்விப்பட்டதும் அவர்களும் திறந்த இல்ல உபசரிப்பு நடந்த சுல்தான் சுலைமான கிளப்பிற்கு சென்றனர்.

பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி அவரின் அதிகாரப்பூர்வமான சீருடையிலும், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அபு பாக்கர் தங்க வர்ண சீன “கடல் நாகம்” பொறிக்கப்பட்ட  சிவப்பு சீன பாரப்பரிய உடையிலும் ஒவ்வொவொரு மேசைக்கும் சென்று ரிம10 வெள்ளை உறை அங்பாவ் வழங்கினர்.

“தவறான நோக்கம் இல்லை”

ஈமச்சடங்கிற்குரிய வெள்ளை பொட்டலத்தில் அங்பாவ் வழங்கப்பட்டது குறித்து வினவியபோது, அது குறித்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று உபசரிப்பில் கலந்துகொண்டவர்களை இப்ராகிம் அலி கேட்டுக்கொண்டார்.

கம்போங் பாருவில் நடத்தப்பட்ட அந்த முதல் சீன புத்தாண்டு உபசரிப்பு  பெர்காசா ஓர் இனவாத அமைப்பல்ல என்பதைக் காட்டுகிறது என்று அந்த உபசரிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான சீனர்களிடம் இப்ராகிம் அலி கூறினார்.

“இதுவரையில் எங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், பெர்காசா இனவாதமற்றது என்று இன்று நிரூபிக்கப்பட்டது. நாங்கள் ஒற்றுமைக்காக போராடுகிறோம்”, என்று கூறிய அவர், “ஒரே மலேசியா” என்று மும்முறை கூவினார். அங்கிருந்தவர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.

மூளை-பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நலன் பேணும் இன்சான் வெல்பேர் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான கோலின் தியு இப்ராகிம் அலிக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் இக்கொண்டாட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரே ஒரு சமூகத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் போராடும் ஓர் அமைப்பு பெர்காசா என்று அறிந்துள்ளோம்”, என்று தியு கூறினார்.

“எனக்கு அங்பாவ் தெரியும், பெர்காசா அல்ல”

உபசரிப்பில் கலந்துகொண்ட செராஸ்சை சேர்ந்த பூ ஆ மே தாம் அங்கு வந்ததற்கு காரணம் அங்பாவும் அன்பளிப்பு கூடைகளும் வழங்கப்படுவதாக கேள்விப்பட்டதாகும் என்றார்.

“இதனை ஏற்பாடு செய்தது யார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு பெர்காசாவை பற்றியோ, அவர்களின் அறிக்கைகள் சீனர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது பற்றியோ தெரியாது”, என்று அம்மாது கூறினார்.

போங் ஆ யோன் என்ற இன்னொருவர் அன்பளிப்பு கூடைகள் இல்லாதது குறித்து தாம் ஏமாற்றமடைந்ததாக கூறினார். அவருக்கும் பெர்காசா பற்றி எதுவும் தெரியாது என்றார்.

சீன சமூகத்தை இலக்காகக் கொண்டு பெர்காசா முன்பு விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து வினவியபோது, “அது கடந்த காலம் ஆகிவிட்டது”, என்று பதில் அளித்தார்.

லோரி ஓட்டுனர் ரிக்கி தீ இந்த உபசரிப்பை ஏற்பாடு செய்தது யார் என்று தமக்குத் தெரியாது என்றார். ஆனால், அதைச் செய்தது பெர்காசா என்று தெரிந்து கொண்ட பின்னரும் அதில் பிரச்னை ஏதும் இல்லை என்றார்.

“நான் பெர்காசா மற்றும் இப்ராகிம் அலி பற்றி படித்துள்ளேன். சீனர் என்ற முறையில் அவரது அறிக்கைகள் என்னை புண்படுத்தியுள்ளது. ஹரியா திருநாளில் மலாய்க்காரர்கள் மறந்து மன்னிக்கும் போது நானும் அவ்வாறே செய்யலாம்”, என்றாரவர்.

பல மூத்த குடிமக்கள் பொதுநல விடுதிகளிலிருந்து உபசரிப்பு நடந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

உபசரிப்பில் கலந்துகொண்ட பலருக்கு பெர்காசா பற்றி ஏதும் தெரியாமல் இருப்பது குறித்து இப்ராகிம் அலியிடம் கேட்டபோது, பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பதால், அது புரிந்துகொள்ளக் கூடியதே என்றார்.

“பெரும்பாலோனோர் மூத்த குடிமக்கள், ஆனால், இங்கு வந்த அவர்களின் தலைவர்கள் விசயம் தெரிந்தவர்கள். நான் அவர்களது கையைக் குலுக்கியபோது  ‘நலமாக இருக்கிறீர்களா டத்தோ இப்ராகிம்…’ என்று அவர்கள் கூறியதைக் கேட்டு வியப்படைந்தேன். என்னைத் தெரியும் என்றும் என்னை செய்தித்தாள்களில் பார்த்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்”, என்றார் இப்ராகிம் அலி.

இந்த உபசரிப்புக்கான நிதியை பெர்காசா குழு உறுப்பினர்கள் வழங்கியதாகவும், அங்பாவுக்கான ரிம10,000 ஐ துணைத் தலைவர் வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் கலந்துகொண்டது எனக்கு வியப்பளித்தது. அங்பாவ் கூட போதுமானதாக இல்லாமல் போய் விட்டது. அதிகமாக உணவும் கொண்டுவர வேண்டியதாயிற்று”, என்று அவர் மேலும் கூறினார்.

TAGS: