டோனி டான் சிங்கப்பூரின் புதிய அதிபர்

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் டோனி டான் இன்று சிங்கப்பூரின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வாக்குகள் இரண்டாவது முறையாக எண்ணப்பட்டப் பின்னர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதிப்பவர் என்று கருதப்படும் 71 வயதான டோனி டான் அவருக்கு அடுத்த நிலையிலிருந்த வேட்பாளரைவிட வெறும் 7,269 வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றார். நேற்று நடைபெற்ற நான்குமுனைப் போட்டியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 2.1 மில்லியன் ஆகும்.

டோனி டானுக்கு கிடைத்த வாக்குகள் 744,397 ஆகும். அது மொத்த வாக்குகளில் 35 விழுக்காடுதான். கடந்த மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. கடந்த 52 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் அக்கட்சிக்கு இது மிக மோசமான நிலையாகும்.

அதிபர் பதவிக்கான தேர்தல் இருமுனைப் போட்டியாக இருந்திருக்குமானால், நேரடிப் போட்டியில் டாக்டர் டோனி டான் தோல்வியத் தழுவி இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.