வெற்றியில் முழுநம்பிக்கை இருந்தால் மட்டுமே பிபிபி போட்டியிடும்

மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி), 13வது பொதுத் தேர்தலில்  இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்குக்கு நெருக்குதல் கொடுக்கப்போவதில்லை.

தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) மாபெரும் வெற்றிபெற வேண்டும் அதற்குத்தான் பிபிபி முன்னுரிமை கொடுக்கும் என்று அதன் தலைவர்  எம்.கேவியஸ் கூறுகிறார்.

“எங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது என்பதைக் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை 100 விழுக்காடு இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவோம்.

“மக்கள் எங்களை ஆதரிக்க தயாராக இல்லை என்றால்,  ஓர் இடத்தைக்கூட கேட்கப்போவதில்லை”, என்றாரவர். நேற்று சுங்கை பட்டாணி, பீடோங், கம்போங் துபா ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் பிபிபியின் கெடா பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்த பின்னர் கேவியஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆனால், பிஎன் தலைவருமான நஜிப்,ஒன்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதியையும் ஒரு சட்டமன்றத் தொகுதியையும் பிபிபி-க்குக் கொடுப்பார் என்றே கேவியஸ் நம்புகிறார்.

பிபிபி போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை அவர் நஜிப்பிடம் ஒப்படைத்திருக்கிறார். “நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்பேன்”, என்றாரவர்.

பிபிபி கடந்த ஆண்டில் 100,000-க்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்த கேவியஸ், அக்கட்சியின் உறுப்பினர்தொகை அரை மில்லியனுக்கும் அதிகம் என்றார்.

புதிய வாக்காளர்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பதை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுத்து வைத்துள்ள அக்கட்சி, ‘செயல்முறைத் திட்டம் 510’ என்பதில் தனிக் கவனம் செலுத்தும்.அத்திட்டத்தின்கீழ் ஓவ்வொரு கிளையும் 510 புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

பிபிபி-இன் பொங்கல் விழாவில் மெர்போக் அம்னோ தொகுதித் தலைவர் தாஜுல் உருஸ் முகம்மட் சைனும் மசீச, மஇகா, கெராக்கான்  ஆகிய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

-பெர்னாமா