சுவா:பேராக்கில் சீனர்களின் கை மேலோங்கும் என டிஏபி பொய் சொல்கிறது

மசீச தலைவர் சுவா சொய் லெக், டிஏபி பேராக்கில் சீனர்களின் அரசை நிறுவ நோக்கம் கொண்டிருப்பதாக பரப்புரை செய்துவருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

“ சீனச் சமூகத்தில் பரப்புரை செய்துவரும் மாற்றரசுக் கட்சியினர், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சீனர்கள் ‘தைக்கோ’  ஆக்கப்படுவார்கள் என்று கூறிவருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது”, என்றவர் கூறியதாக இன்றைய உத்துசான் மலேசியா செய்தி கூறுகிறது.

இது, சீனச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கான தந்திரம் என்று கூறிய சுவா, அதை சீனர்கள் நம்பக்கூடாது என்றார்.

“இது ஒரு பொய். கடந்த பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சி வென்றது ஆனால், மந்திரி புசாராக  நியமனம் செய்யப்பட்டவர் சீனர் அல்ல பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்.”

சீனர்கள் டிஏபி-க்கு வாக்களிப்பது பாஸ்ஸையும் பிகேஆரையும் வலுப்படுத்தி மாற்றரசுக் கூட்டணியில் அவர்களின் கை மேலோங்கியிருக்கத்தான் வழி செய்யும் என்றாரவர்.

“2008 பொதுத் தேர்தலில் டிஏபி 18 இடங்களை வென்றது.பாஸ், பிகேஆர் ஆகியவை 11 இடங்களைத்தான் பெற்றன. ஆனால், அம்மாநிலத்தில் ‘தைக்கோ’ ஆனது பாஸ்தானே தவிர டிஏபி அல்ல”, என்று சொய் லெக் கூறினார்.

இதனிடையே, இன்றைய சினார் ஹரியான் செய்தியொன்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்-அல்லாதவர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் அதற்காக சிலரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் ஜோகூர் பாஸ் தலைவர் மாஃபோட்ஸ்  முகம்மட் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. பாஸ்-ஆதரவாளர் காங்கிரசிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

“சிலரின் பெயர்களை மத்திய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பாஸ் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவர்”, என்றவர் கூறினார்.