ஹாடி விலகக் கூடாது என்கிறார் நிக் அஜிஸ்

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முன் வந்துள்ளதை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் ஆதரிக்கவில்லை.

“இஸ்லாமியப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பலர் இருக்கலாம். ஆனால் அப்துல் ஹாடி போன்று திறமையுள்ள சிலரே இருக்கின்றனர். அவர் ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும் ? நான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுச் சேவை ஊழியர்கள் ஓய்வு வயது வரைக்கு மட்டுமே வேலை செய்யலாம் என்பதைப் போல் அல்லாது அரசியல் தலைவர்கள் என்னும் முறையில் அவசியமானால் அவர்கள் மரணமடையும் வரையில் சேவை செய்யலாம் என அவர் மேலும் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஹாடி விலகிக் கொள்ளக் கூடாது என நேற்று எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹாடி எதிர்த்தரப்புக்கு ஒரு சொத்து எனவும் அவர் வருணித்தார்.

இதனிடையே பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் ஆணையாளர் ஹசான் அலி அந்தக் கட்சியைத் தாக்கிப் பேச வேண்டும் என பாஸ் உலாமா தலைவர் ஹருண் தாயிப் கிண்டலாகக் கேட்டுக் கொண்டுள்ளார் என உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்களுக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஏனெனில் நாங்கள் அத்தகைய பிரச்னைகளுக்குப் பழக்கப்பட்டுள்ளோம். பாஸ் கட்சிக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்க நாங்கள் தயார்,” என அவர் சொன்னதாக அந்த நாளேடு குறிப்பிட்டது.

ஹசானுடைய ஆதரவானவர்  எனக் கருதப்பட்ட ஹருண், ஹசான் நீக்கப்படுவதற்கு முன்பு அவரைத் தற்காத்துப் பேசி வந்தார்.