கெடாவில் மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் மந்திரி புசார் குறை கூறப்பட்டார்

Kuin எனப்படும் Kolej Universiti Insaniah-வைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டதை மீட்டுக் கொள்ள கெடா மாநில அரசாங்கம் மறுப்பதை பினாங்கில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சி ஒன்று குறை கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடத்தப்படுவதின் மூலம் அந்தப் பிரச்னையைத் தீர்த்து விடலாம் என பினாங்கு டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுப் பொருளாளர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

பிரச்னைகளைக் குறிப்பாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்ட பூசலைத் தீர்ப்பதற்கு தனது வழி முறைகள் சிறந்தவை என்று பக்காத்தான் ராக்யாட் காட்டுவதற்கு இது நல்ல வாய்ப்பு என்றும் அவர் சொன்னார்.

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தைப் போன்று தனியா உயர் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் 555, சட்டம் 174 ஆகியவற்றின் கீழ் கடந்த ஆண்டு ஜுன் மாதம் அந்த ஐந்து மாணவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

அவர்கள் நீக்கப்பட்டது உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் செபராங் ஜெயா நகராட்சி மன்ற உறுப்பினருமான சிம் வலியுறுத்தினார்.

தங்களுடைய தங்கும் விடுதியும் தொழுகை மண்டபமும் அமைந்துள்ள கட்டிடத்தை பள்ளிக்கூடமாக மாற்றுவதற்கு நிர்வாகம் எடுத்துக் கொள்வதற்கு எதிராக ஆட்சேபம் செய்ததற்காக அந்த மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

புக்கு ஜிங்காவில் கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளை பக்காத்தான் கூட்டணி  அரசுகள் நிலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பக்காத்தானுடைய கொள்கை ஆவணமாகக் கருதப்படும் புக்கு ஜிங்கா 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி கெப்பாளா பத்தாஸில் நடத்தப்பட்ட  பக்காத்தான் தேசிய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அம்னோ/பிஎன் நிர்வாக “அதிகார அத்துமீறல்களின்” கீழ் 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து விட்ட மலேசியர்களுடைய அவாக்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விவாதங்களின் முடிவில் அந்தக் கொள்கை ஆவணம் தயாரிக்கப்பட்டதாக சிம் குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களை ரத்துச் செய்வதும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.