வெள்ளை ‘அங்பாவ்’-க்காக மன்னிப்புக் கேளுங்கள் என பெர்க்காசாவுக்கு அறிவுரை

பெர்க்காசா நேற்று நடத்திய முதலாவது சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் வெள்ளை நிற கடித உறைகளில் ‘அங்பாவ்’ கொடுத்ததற்கான மன்னிப்புக் கேட்க வேண்டும் என மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா மீது நெருக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

பெர்க்காசா மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட கெரக்கான், பெர்க்காசா செய்துள்ளது சீன சமூகத்தைப் “பெரிதும் அவமானப்படுத்துவதற்கு” இணையாகும் எனக் கூறியது.

“சீனர்களுடைய பழக்க வழக்கங்களில் வெள்ளை கடித உறைகள் ஈமச் சடங்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன,” என கெரக்கான் உதவித் தலைவர் மா சியூ கியோங் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒளிமயமான மகிழ்ச்சிகரமான விழா என்னும் அர்த்தத்தைக் கொண்டுள்ள சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வெள்ளை நிற உறைகளில் ‘அங்பாவ்’ கொடுக்கப்பட்டுள்ளது, இப்ராஹிம் அலி மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்கவில்லை என்பதையும் உண்மையான போக்குடையவர் அல்ல என்பதையும் காட்டியுள்ளது.”

மற்ற பண்பாடுகளை அறியாமல் இருப்பதற்காக மா, இப்ராஹிமைச் சாடினார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியா முயற்சிக்கு இப்ராஹிம் இடையூறு என்றும் அவர் வருணித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ள அவர், மற்ற இனங்களுடைய பண்பாடுகள் பற்றி இன்னும் அறியாதவராக இருக்கிறார். அதனால் தான் அவர் எதுவும் சிந்திக்காமல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,” என்றார் அவர்.

தான் இனவாத அமைப்பு அல்ல என்பதைக் காட்டுவதற்காக பெர்க்காசா நேற்று சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்தியது.

கோலாலம்பூர் சுல்தான் சுலைமான் கிளப்-பில் நிகழ்ந்த அதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பெரும்பாலும் முதிய குடிமக்கள் கலந்து கொண்டனர்.

என்றாலும் பாரம்பரிய சிவப்பு உறைகளுக்குப் பதில் வெள்ளை உறைகளில் இப்ராஹிம் 10 ரிங்கிட்  ‘அங்பாவ்’-களை விநியோகம் செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டது.

வேண்டுமென்றே அவ்வாறு செய்யப்படவில்லை என்றும் வெள்ளை உறைகள் ஈமச் சடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பெர்க்காசாவுக்குத் தெரியாது என்றும் அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி இன்று விளக்கமளித்தார். ஆனால் மன்னிப்புக் கேட்கவில்லை.