கடந்த ஆண்டு ஜூலை 9-இல் பெர்சே 2.0 தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட டெக்சி ஓட்டுனர் பஹாருடின் அஹமட் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் மரண விசாரணை இன்று தொடங்கியது.
கோலாலம்பூர் கொரோனர் நீதிமன்றத்தில், மரண விசாரணை அதிகாரி (கொரோனர்) சுல்கிப்ளி அப்துல்லா தலைமையில் அவ்விசாரணை நடைபெறுகிறது.
அவருக்கு உதவியாக அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் கல்மிசா சாலேயும் அஹமட் இஸ்ராக்கும் உள்ளனர்.இறந்துபோனவரின் குடும்பத்தினருக்காக வழக்குரைஞர் அஹ்மா ஜூப்லிஸ் ஃபைஸா விசாரணை முறையாக நடப்பதைக் கவனித்து வருகிறார்.
இவ்விசாரணைக்கு மொத்தம் 30 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள். இன்று ஐவர் சாட்சியம் அளிப்பர்.
50வயது பஹாருடின், மாரடைப்பின் காரணமாக இறந்தார் என்று போலீசார் கூறுகின்றனர். ஆனால், பெர்சே பேரணியில் கலந்துகொண்டவர்கள் அந்த அமைதிக் கூட்டத்தைக் கலைக்க போலீசார் அளவுமீறிப் பயன்படுத்திய கண்ணீர் புகைக்குண்டுகள்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்கிறார்கள்.