கோத்தா சிபூத்தே மீது முறையீடு செய்ய கெடா சபாநாயகருக்கு அனுமதி

கோத்தா சிபூத்தே பேராளர் அபு ஹசான் ஷரிப்பை சட்டமன்ற உறுப்பினராக நிலை நிறுத்துவதற்கு முறையீட்டு நீதிமன்றம் செய்துள்ள முடிவை எதிர்த்து கெடா மாநில சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ஈசா இஸ்மாயில் மேல் முறையீடு செய்து கொள்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவ்ஸ் ஷரீப் தலைமையில் கூடிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழு அந்த முடிவைச் செய்தது.

மலாயா தலைமை நீதிபதி சுல்கெப்லி அகமட் மாக்கினுடின், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான அப்துல் ஹமிட் எம்போங், ஹசான் லா, சுரியாடி ஹலிம் ஒமார் ஆகியோர் மற்ற நீதிபதிகள் ஆவர்.

கோத்தா சிபூத்தே தொகுதிக்கான இடம் காலியாகி விட்டது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதி ராம்லி அலி தலைமையில் கூடிய முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி மாற்றியது. லிண்டோன் அல்பர்ட், அஜியா அலி ஆகியோர் மற்ற நீதிபதிகள் ஆவர்.

அபு ஹசான் 2009ம் ஆண்டு தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றக் கூட்டங்களுக்கு வராததால் அப்துல் ஈசாவின் வேண்டுகோளுக்கு இணங்க கோத்தா சிபூத்தே தொகுதிக்கான இடம் காலியாகி விட்டதாக 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அலிஸாத்துல் கைர் ஒஸ்மான் கைருதின் தீர்ப்பளித்தார்.

கெடா அரசமைப்பின் 51வது விதியின் கீழ், சபாநாயகர் வழங்கிய விடுமுறை இல்லாமால் தொடர்ச்சியாக இரண்டு கூட்டங்களுக்கு வராமல் இருக்கும் சட்டமன்ற உறுப்பினருடைய இடம் காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும்.

TAGS: