டிஏபிதான் உலகின் இனவாதம் மிக்கக் கட்சி என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா தலையங்கம் எழுதியிருப்பது அக்கட்சியைச் சினமடைய வைத்துள்ளது.
அத்துடன் துணைப் பிரதமர் முகைதின் யாசின், டிஏபி “குறுகிய மனப்போக்குக் கொண்ட, மலாய்க்காரர்-எதிர்ப்புக் கட்சி” என்று குறிப்பிட்டிருப்பது அதை மேலும் சீற்றமடைய வைத்துள்ளது.
இது, அவர்கள் “விரக்தி” அடைந்திருப்பதைக் காண்பிக்கிறது என்று டிஏபி தலைமை செயலாளர் லிம் குவான் எங் கூறினார். அதிகமதிகமான மலாய்க்காரர்கள் அம்னோவின்மீதும் அதன் ஊடகங்கள்மீதும் நம்பிக்கை இழந்து வருவதையும் அதன் விளைவாக அவர்கள் டிஏபி-இல் சேரத் தொடங்கியுள்ளதையும் கண்டு அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
டிஏபியைக் கடுமையாகக் குறைகூறும் மலாய்மொழி நாளேடான உத்துசான், அண்மையில் பினாங்கு உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு ரிம200,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதை அடுத்து மலாய்க்காரரிடையே பெற்றிருந்த நம்பிக்கையை இழந்து விட்டது என்றாரவர்.
டிஏபியைக் குறுகிய மனப்பான்மை கொண்ட கட்சி என்று கூறும் உரிமை முகைதினுக்கு இல்லை. அது பல இனங்களையும் எல்லா மலேசியர்களையும் பிரதிநிதிக்கும் ஒரு கட்சி. ஆனால், அம்னோ “முதலில் மலாய்க்காரர், இரண்டாவதாகத்தான் மலேசியர்” என்று கூறும் கட்சியாகும்.
மே 13 இனக் கலவரங்களில் பலநூறு மலேசியர்கள், குறிப்பாக மலாய்க்காரர்-அல்லாதார் உயிரிழந்தனர். ஆனால் அந்த மே13-ஐ ஒரு புனித நாள் என்று குறிப்பிட்ட உத்துசான் மலேசியாவை கண்டிக்க மறுத்தார் முகைதின். இதிலிருந்து யார் குறுகிய மனப்போக்குள்ளவர், யார் இனவாதி என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று லிம் வலியுறுத்தினார்.
மலாய்க்காரர் உரிமைக்காக போராடியதில் பெருமிதம்
“மலாக்காவில் ஏழை மலாய்க்காரர் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடியதற்காக சிறைசெல்ல நேரிட்டதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.மலாய்க்காரர் அல்லது மலாய்க்காரர்-அல்லாதார் உரிமைக்காக போராடி சிறைசென்ற பிஎன் தலைவர்கள் அவரேனும் உண்டா?”, என்றவர் வினவினார்.
“உண்டு, பிஎன் தலைவர்கள் சிறை சென்றது உண்டு.மக்களுக்காக அல்ல, ஊழல் குற்றங்களுக்காக, மக்களின் பணத்தை ஏமாற்றிக் கொள்ளையிட்டதற்காக”, என்று பினாங்கு முதல்வர் மேலும் கூறினார்.
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், சீனர்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணி சோதனை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது பிஎன்னையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் கண்டித்ததை அடுத்து உத்துசான் மலேசியா அக்கட்சிமீது புதிய தாக்குதலைத் தொடங்கியது.
லிம் கிட் சியாங் பிஎன் உதவி இல்லாமலேயே சீனர்கள் பொருளாதார வளப்பம் அடைந்திருக்கிறார்கள் என்றும் கூட்டரசு அரசாங்கத்தில் “ஊழல்களும்” “அதிகார அத்துமீறல்களும்”தான் நிரம்பியுள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மிங்குவான் மலேசியா அதன் தலையங்கத்தில், 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக லிம் கிட் சியாங் சீனர்களைத் தூண்டி விடுகிறார் என்று குற்றம் சாட்டியது.
“அது, டிஏபி மலேசியாவில் மட்டுமல்ல உலகிலேயே இனவாதம் நிறைந்த கட்சி என்பதைக் காண்பிக்கிறது”, என்று ஆவாங் செலாமாட் என்ற புனைபெயரில் எழுதப்பட்டிருந்த அந்தத் தலையங்கம் கூறியது.
“சுவா, சீனர்கள் ஒன்றிணைந்து மாற்றத்துக்கு எதிராகவும் பிஎன்னுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க வேண்டும் என்று சுவா கேட்டுக்கொண்டால் அது பரவாயில்லை. ஆனால், சீனர்கள் ஒன்றுசேர்ந்து பக்காத்தானை ஆதரித்து அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டால் அது தப்பா?”, என்று குவான் எங் கேள்வி எழுப்பினார்.