ஷம்சுபாஹ்ரின்: ‘போலீஸுக்கு லஞ்சம் கொடுக்குமாறு என்னை என்எப்சி தலைவர் நெருக்கினார்’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் ஊழல்களை மறைப்பதற்கு போலீஸுக்கு லஞ்சம் கொடுக்குமாறு அதன் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் நெருக்குதல் கொடுத்தார் என சாலே-யை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வணிகரான ஷம்சுபாஹ்ரின் இஸ்மாயில் கூறிக் கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் பொது மருத்துவமனையில் சமர்பித்த போலீஸ் புகாரில் அவர் அவ்வாறு கூறிக் கொண்டுள்ளார்.

அந்தத் தகவல் இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

போலீஸ் புகார் இவ்வாறு கூறுகிறது: “எனது நியமனத்தில் போலீஸுடனான என்எப்சி விஷயத்தை மறைக்குமாறு கேட்டுக் கொண்டும் அழுத்தம் கொடுக்கும் செய்தி சாலே-யிடமிருந்து எனக்குக் கிடைத்தது.”

“சாலே தொலைபேசி அழைப்புக்களிலும் குறுஞ்செய்திகளிலும் அந்த விவகாரத்தை மறைப்பதற்குப் போலீசுக்கு லஞ்சம் கொடுக்குமாறும் எனக்கு அழுத்தம் கொடுத்தார்.”

என்எப்சி உள்விவகாரங்களைத் “தூய்மைப்படுத்துவதற்காக” தம்மை நிறுவன அறிவுரையாளராகவும் ஆலோசகராகவும் என்எப்சி நியமித்ததாக ஷம்சுபாஹ்ரின் தமது புகாரில் கூறிக் கொண்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் உதவுவதற்காக தாம் போலீசாரைச் சந்தித்ததாகவும் ஆனால் தாம் லஞ்சம் கொடுக்கப் போவதில்லை என சாலே-யிடம் கூறியதாகவும் அவர் சொன்னார்.

எளிய நிபந்தனைகளுடன் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை, தான் நிர்வாகம் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்ட கால்நடை வளர்ப்புத் தொழிலுக்குப் பயன்படுத்தாமல் ஆடம்பரச் சொத்துக்கள் மீது செலவு செய்து தவறாகப் பயன்படுத்தியதாக என்எப்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

‘ஆதாரங்கள் மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்கவில்லை’

பிகேஆர்-டம் எஸ்எம்எஸ் என்னும் குறுஞ்செய்தி ஆதாரங்கள் உள்ளதா என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரனிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர்,” “தகவல்கள் அடங்கிய தொலைபேசி  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இருக்கிறது,” என்றார்.

ஷம்சுபாஹ்ரினிடமிருந்து பல தொலைபேசிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒன்றைத் தவிர  மற்ற அனைத்தும்  திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டன. எம்ஏசிசி வைத்துள்ள தொலைபேசியில் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளன.”

“அது அதிகாரிகள் கைகளிடம் உள்ளது. ஆனால் எங்களிடம் பதிவுகள் உள்ளன. நாங்கள் அதற்கு ஆதாரங்களை வைத்துள்ளோம்,” என்றார் சுரேந்திரன்.

தகவல்களைப் பெற்றிருந்தும் எம்ஏசிசி ‘உண்மையான குற்றவாளிகள்’ மீது நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆலோசகர் கட்டணமாக 2 மில்லியன் ரிங்கிட்டை சாலே-யை ஏமாற்றி விட்டதாக ஷம்சுபாஹ்ரின் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

ஷம்சுபாஹ்ரினுடைய வழக்குரைஞர்களான சுரேந்திரனும் பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயாவும் அவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கு ஜனவரி 19ம் தேதி 300,000 ரிங்கிட்டை திரட்டினர். ஆனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு மேலும் இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

போலீஸ் புகாரை ஷம்சுபாஹ்ரின் சமர்பித்த அதே நாளில் அந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. அந்த நேரத்தில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது

ஷம்சுபாஹ்ரின் இப்போது சுங்கை பூலோ சிறையில் இருக்கிறார். தமக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என அஞ்சி அவர் ஜாமீனில் வெளியில் வர மறுக்கிறார் என்றும் சுரேந்திரன் தெரிவித்தார்.

“சாலே மற்றும் அவரது துணைவியார் ஷாரிஸாட் அப்துல் ஜலில் (மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ) ஆகியோருடைய கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கும் விஷயங்களள மறைப்பதற்கும் சாலே பொய் சொல்லி என்னை பலிகடாவாக்கி விட்டார் என நான் நம்புகிறேன்,” எனவும் போலீஸ் புகாரில் ஷம்சுபாஹ்ரின் கூறியுள்ளார்.

“அந்தக் குற்றச்சாட்டுக்களும் புலனாய்வும் அரசியல் நோக்கம் கொண்டவை. நான் பலிகடாவாக்கப்பட்டுள்ளேன். என்எப்சி மீதான விசாரணையை குலைப்பதை குறியாகக் கொண்டவை.”

TAGS: